விசாரணைக்கு அழைத்து சென்றவர்களை விடுவிக்க வலியுறுத்தி கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
கும்மிடிப்பூண்டியில் ஆட்டோ டிரைவரை தாக்கியதாக கூறி விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட 3 பேரை விடுவிக்க வலியுறுத்தி போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தை சேர்ந்தது சேகண்யம் ஊராட்சி ஆகும். மொத்தம் 6 வார்டுகளை கொண்ட இந்த ஊராட்சிக்கான துணைத்தலைவரை தேர்வு செய்வதில் இன்னும் இழுப்பறி இருந்து வருகிறது. இதனால் ஏற்பட்டு உள்ள கருத்து வேறுபாட்டால் தற்போது ஊராட்சிக்கு உட்பட்ட வார்டு உறுப்பினர்களுக்கு இடையே மன கசப்பும், பிரிவினையும் உண்டாகி உள்ளது.
இந்த நிலையில் இந்த ஊராட்சிக்கு உட்பட்ட உமிப்பேடு கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான பிரித்விராஜ் (வயது 21) என்பவர் ஆட்டோவில் வீடு திரும்பும் போது, அவரிடம் வழுதலம்பேடு கிராமத்தை சேர்ந்த ஒருவர் செய்த தகராறில் ஆட்டோ கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பிரித்விராஜ் கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் பட்டுப்பள்ளி மற்றும் உமிப்பேடு கிராமத்தை சேர்ந்த 3 பேரை விசாரணைக்காக கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர்.
போலீஸ் நிலையம் முற்றுகை
இதனையறிந்த அந்த 2 கிராமங்களையும் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 60 பேர் கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையம் முன்பு நேற்று திடீரென முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதில் உள்ள போட்டியாலும், சிலரின் தூண்டுதலின் பேரிலும் இந்த பொய் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும், விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட 3 பேரையும் விடுவிக்கக்கோரியும் முறையிட்டனர்.
இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் அழைத்து பேசியதில் அவர்களுக்குள் ஒரு சுமுகமான தீர்வு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து விசாரணைக்கு போலீஸ் நிலையம் அழைத்து வரப்பட்ட 3 பேரும் விடுவிக்கப்பட்டனர். இதனையடுத்து இரு தரப்பினரும் சமாதானம் அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story