2-வது நாளாக வங்கிகள் வேலை நிறுத்தம்; தொழில்துறையினர் அவதி
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக வங்கிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. இதன் காரணமாக தொழில்துறையினர், பொதுமக்கள் அவதியடைந்தனர்.
திருப்பூர்,
ஊதிய உயர்வு ஒப்பந்தம் காலாவதியாகி பல மாதங்களை கடந்தும் ஐ.பி.ஏ.யும், மத்திய அரசும் பேச்சுவார்த்தையை காலதாமதப்படுத்தி வருகின்றன. இதனை உடனடியாக முடித்து தர வேண்டும். வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் காலாவதியாகி பல மாதங்களாகியுள்ளது.
அதற்கான பேச்சுவார்த்தையை மத்திய அரசும், இந்திய வங்கிகள் கூட்டமைப்பும் காலதாமதப்படுத்தி வருகிறது. எனவே ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 9 வங்கி ஊழியர் சங்கங்கள் பங்கேற்றுள்ளன. இதில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, பேங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, கர்நாடகா வங்கி, கரூர் வைசியா உள்ளிட்ட வங்கிகளை சேர்ந்த முதன்மை மேலாளர்கள் முதல் துப்புரவு தொழிலாளர்கள் வரை என மொத்தம் 353 வங்கி கிளைகளை சேர்ந்த 5 ஆயிரம் ஊழியர்கள் 2-வது நாளாக நேற்றும் பங்கேற்றனர்.
இதன் காரணமாக நேற்றும் ரூ.1,000 கோடிக்கு பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. கடந்த 2 நாட்களில் மொத்தம் ரூ.2 ஆயிரம் கோடிக்கு பணபரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக பொதுமக்கள் மற்றும் தொழில்துறையினர் பல்வேறு பாதிப்புகளை சந்தித்துள்ளனர். குறிப்பாக திருப்பூரில் உள்ள தொழிலாளர்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை சம்பளம் வழங்கப்படுவது வழக்கம்.
இந்த போராட்டத்தின் காரணமாக நேற்றும், நேற்று முன்தினமும் தொழில்துறையினர் வங்கிகளில் பணம் எடுக்க முடியாமல் அவதியடைந்தனர். அத்துடன் ஏ.டி.எம். மையங்களிலும் பணம் இல்லாததால் பொதுமக்கள் பலரும் தங்களது தேவைகளுக்கு பணம் எடுக்க முடியாமல் சிரமத்தை சந்தித்தனர்.
இந்த நிலையில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற மார்ச் 11-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை 2-ம் கட்ட வேலை நிறுத்த போராட்டம் நடக்க உள்ளது.
இதன் பின்னரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் ஏப்ரல் 1-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story