193 கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு
திருப்பூர் மாவட்டத்தில் 193 கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 35 வணிகர்களுக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் சிறு, குறு வணிகர்களுக்கு உடனடி அபராதம் விதிப்பதற்கு உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலருக்கு அதிகாரம் வழங்கி, மாநில உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி சிறு, குறு வணிகர்கள், பெட்டிக்கடை வியாபாரிகள் புகையிலை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், முதல்முறை குற்றத்திற்கு ரூ.5 ஆயிரம் அபராதம், 2-வது முறை ரூ.10 ஆயிரம், 3-வது முறையும் இதே குற்றத்தில் ஈடுபட்டால், ரூ.25 ஆயிரம் அபராதம் விதிப்பதோடு, அந்த வணிகருக்கு உணவு பாதுகாப்புத்துறையின் பதிவு சான்றையும் ரத்து செய்ய நியமன அலுவலருக்கு அதிகாரம் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த உத்தரவில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஒருமுறை மட்டுமே பயன்படுத்த இயலும் நெகிழிப்பை (பிளாஸ்டிக் பைகள்) பயன்படுத்தும், விற்பனை செய்யும் வணிகர்களுக்கு அபராதம் விதிக்க மாவட்ட நியமன அலுவலருக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் அறிவுறுத்தலின் பேரில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும், அந்தந்த பகுதி உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், உடனடி அபராதமும் விதித்து வருகிறார்கள்.
கடந்த 29 மற்றும் 30-ந் தேதி ஆகிய 2 நாட்களில் அவினாசி வட்டாரத்திற்கு உட்பட்ட அவினாசி மற்றும் திருமுருகன்பூண்டி பகுதிகளில் ஆய்வு செய்த போது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததற்காக 5 பெட்டிக்கடைக்காரர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும், நெகிழிபைகள் விற்பனைக்காக வைத்திருத்த ஒருவருக்கு ரூ.2 ஆயிரமும் அபராதம் விதிக்கப்பட்டது.
அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 193 கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வின் போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 35 வணிகர்களுக்கு ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் உடனடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதற்கான நோட்டீசும் உடனே வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மாவட்டம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும்.
மேலும், பொதுமக்கள், மாவட்டத்தில் எங்காவது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால், உணவு பாதுகாப்புத்துறையின் 94440-42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story