6 மாதங்களில் வைகை அணையில் இருந்து 18 ஆயிரம் மில்லியன் கனஅடி தண்ணீர் திறப்பு
விவசாயம், குடிநீர் தேவைக்காக கடந்த 6 மாதங்களில் வைகை அணையில் இருந்து 18 ஆயிரம் மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் முதல் போக பாசனத்துக்கும், அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் 2-ம் போக பாசனத்துக்கும் தண்ணீர் திறக்கப்படும். கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்ததால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணை முழுக்கொள்ளளவை எட்டியது.
இதன்காரணமாக கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து பாசனத்துக்காக தொடர்ந்து கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதுதவிர மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் மற்றும் கண்மாய் பாசனத்துக்கும், விருதுநகர் மாவட்ட குடிநீர் தேவைக்காகவும் ஆற்றுப்படுகை வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது. மேலும் உசிலம்பட்டி பகுதி கண்மாய்களுக்காக 58-ம் கால்வாயிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
கடந்த மாதம் மழை நின்று நீர்வரத்து குறைந்த நிலையில், பாசனபகுதிகளில் முறைப்பாசனம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி வைகை அணையில் இருந்து குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வைகை அணையில் இருந்து கடைசி கட்டமாக நேற்று திறக்கப்பட்டது. தொடர்ந்து 6 நாட்களுக்கு பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட இருக்கிறது.
6 நாட்களுக்கு பின்னர் வைகை அணை தண்ணீர் திறப்பது நிறுத்தப்படும். அதன்பிறகு இருப்பில் உள்ள தண்ணீரை கோடை காலம் முடியும் வரை குடிநீர் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் மட்டும் விவசாயம், குடிநீர் மற்றும் கண்மாய் பாசன தேவைக்காக மொத்தம் 18 ஆயிரம் மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மழை நேரத்தில் வந்த தண்ணீர் அனைத்தும் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று காலை 6 மணி நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 54.53 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பாசனம் மற்றும் மதுரை மாநகர குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,190 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் மொத்த நீர்இருப்பு 2,643 மில்லியன் கனஅடி ஆகும்.
Related Tags :
Next Story