கழிவுகளை ரோட்டில் கொட்டிய பிரிண்டிங் நிறுவனத்தின் மின் இணைப்பு துண்டிப்பு
பிரிண்டிங் கழிவுகளை ரோட்டில் கொட்டிய பிரிண்டிங் நிறுவனத்தின் மின் இணைப்பை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் துண்டித்தனர். மேலும், சரக்கு வேனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் ஆடைகள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகள், வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்கள் என பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இதுபோல் சாய, சலவை ஆலைகள் மற்றும் பிரிண்டிங் நிறுவனங்கள் ஏராளமானவை செயல்பட்டு வருகின்றன. இவை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுத்தான் இயங்க வேண்டும். ஆனால் அனுமதி பெறாமலும், முறைகேடாகவும் இயங்கி வருகிற சாய, சலவை ஆலைகள் மற்றும் பிரிண்டிங் நிறுவனங்கள், கழிவுகளை விவசாய நிலங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் திறந்து விட்டு விடுகின்றன.
இதன் காரணமாக விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. நீர்நிலைகளில் சாயக்கழிவுநீர் திறந்துவிடப்படுவதால், அவை பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக நொய்யல் ஆறு, ஜம்மனை ஓடை உள்ளிட்ட பகுதியில் சாயக்கழிவுநீர் அடிக்கடி திறந்து விடப்பட்டு வந்தன. இந்நிலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். இதன் காரணமாக இந்த சம்பவங்கள் குறைந்தன.
இருப்பினும் திருப்பூர் பகுதியில் முறைகேடாக பிரிண்டிங் நிறுவனங்கள் பல இயங்குவதாகவும், இந்த நிறுவனங்கள் அடிக்கடி பிரிண்டிங் கழிவுகளை பல்வேறு பகுதிகளில் கொட்டி வருவதாகவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன்படி அதிகாரிகள் ஆய்வை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் சம்பவத்தன்று நல்லூர் பகுதியில் பிரிண்டிங் கழிவுகளை ஒரு சரக்கு வாகனத்தில் ரோட்டோரம் ஒருவர் கொட்டிக்கொண்டிருந்தார். உடனே பொதுமக்கள் இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் மாசுக்கட்டு்ப்பாட்டு வாரிய அதிகாரி செந்தில் விநாயகம் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும், அங்குள்ள டைட்டானிக் ஸ்கீரீன் பிரிண்டிங் என்ற நிறுவனத்தை ஆய்வு செய்தனர். இதில் அந்த நிறுவனத்தில் இருந்து தான் பிரிண்டிங் கழிவுகள் முறைகேடாக ரோட்டோரம் கொட்டி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் இது தொடர்பான ஆவணங்களை சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கும், மாவட்ட கலெக்டருக்கும் அனுப்பினர்.
இதற்கிடையே இந்த பிரிண்டிங் நிறுவனத்தின் மின் இணைப்பை துண்டிக்க அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதன்படி நேற்று மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும், இந்த சம்பவத்திற்கு பயன்படுத்திய சரக்கு வேனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்ய கலெக்டரிடம் அனுமதி கேட்டனர்.
அவரது உத்தரவின் பேரில் சரக்கு வேன் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி செந்தில் விநாயகம் கூறியதாவது:-
திருப்பூரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் ஆய்வு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சாய, சலவை ஆலைகள் மற்றும் பிரிண்டிங் நிறுவனங்கள் உரிய அனுமதி பெற்று செயல்பட வேண்டும். அனுமதி பெற்று செயல்படும் நிறுவனங்களும் முறைகேடுகளில் ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story