வீட்டு வசதி வாரியத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு குலுக்கல் முறையில் வீடு, மனைகள் ஒதுக்கீடு
ஈரோடு வீட்டு வசதிப்பிரிவுக்கு உள்பட்ட பகுதிகளில் குலுக்கல் முறையில் வீடு, மனைகள் ஒதுக்கீடு நடைபெற்றது.
ஈரோடு,
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஈரோடு வீட்டு வசதிப்பிரிவுக்கு உள்பட்ட ஈரோடு, பெருந்துறை, பள்ளிபாளையம், கோபி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள், வீட்டு மனைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு காலியாக உள்ள வீடுகள் மற்றும் மனைகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் வகையில் ஈரோடு வீட்டு வசதிப்பிரிவு மூலம் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் வீடுகள் மற்றும் மனைகள் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு குலுக்கல் முறையில் வீடு, மனை ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில் குலுக்கல் நிகழ்ச்சி நடந்தது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சேலம் சரக கண்காணிப்பு பொறியாளர் எஸ்.சுந்தரேசன் தலைமையில் குலுக்கல் நடந்தது. ஈரோடு மாவட்ட வழங்கல் அதிகாரி கற்பகவல்லி, நாமக்கல் மாவட்ட துணை கலெக்டர் என்.எஸ்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குலுக்கல் ஏற்பாடுகளை ஈரோடு வீட்டுவசதிப்பிரிவு செயற்பொறியாளர் கே.ஏ.பெரியசாமி தலைமையில் அதிகாரிகள் செய்து இருந்தனர். வீடு, மனைகள் கேட்டு விண்ணப்பித்து இருந்த விண்ணப்பதாரர்களின் பெயர் ஒரு குலுக்கல் கருவியிலும், வீடு அல்லது மனைகளின் வரிசை எண்கள் ஒரு குலுக்கல் கருவியிலும் வைத்து குலுக்கல் நடைபெற்றது. இந்த குலுக்கலில் மனைகள் அல்லது வீடுகள் ஒதுக்கீடு பெற்றவர்கள் ஒரு மாத காலத்துக்குள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நடைமுறைகளின்படி உரிய தொகையை செலுத்த அறிவுறுத்தப்பட்டனர்.
Related Tags :
Next Story