நெல் கொள்முதல் நிலையங்கள் மேலும் 7 இடங்களில் திறக்கப்படும் - கலெக்டர் தகவல்


நெல் கொள்முதல் நிலையங்கள் மேலும் 7 இடங்களில் திறக்கப்படும் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 1 Feb 2020 10:30 PM GMT (Updated: 1 Feb 2020 10:56 PM GMT)

மாவட்டத்தில் ஏற்கனவே 38 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட நிலையில், மேலும் 7 இடத்தில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.

சிவகங்கை, 

இதுகுறித்து கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

மாவட்டத்தில் இந்த ஆண்டு நல்ல விளைச்சல் உள்ளதால் அரசு நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து போதிய விளைச்சல் மூலம் பெறப்பட்ட நெல் மூடைகளை, விவசாயிகள் முழுமையாக பயன்பெறும் வகையில் மாவட்ட நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம், 12 ஊராட்சி ஒன்றியங்களில் அந்தந்தப் பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் 45 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டது.

அதில், தற்போது 38 நெல் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மேலும் 7 கொள்முதல் நிலையங்கள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் அரசு நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் 100 முதல் 120 மெ.டன் வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இதனால் விவசாயிகளுக்கான காலவிரையம் தவிர்க்கப்படுவதுடன், உரிய விலையும் கிடைக்கப்பெறுவதால் விவசாயிகளுக்கு லாபம் முழுமையாக கிடைக்கும். விவசாயிகள் இதுபோன்ற அரசு நெல் கொள்முதல் நிலையங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் நெல்கொள்முதல் நிலையங்களில் தவறுகள் நடக்காமல் கண்காணிக்க, விவசாயிகள் கொண்ட விழிப்புணர்வு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story