டி.என்.பாளையம் அருகே ஊருக்குள் புகுந்து நாய், ஆட்டை அடித்துக்கொன்ற சிறுத்தை


டி.என்.பாளையம் அருகே ஊருக்குள் புகுந்து நாய், ஆட்டை அடித்துக்கொன்ற சிறுத்தை
x
தினத்தந்தி 2 Feb 2020 4:38 AM IST (Updated: 2 Feb 2020 4:38 AM IST)
t-max-icont-min-icon

டி.என்.பாளையம் அருகே ஊருக்குள் புகுந்த சிறுத்தை நாய், ஆட்டை அடித்துக்கொன்றது.

டி.என்.பாளையம்,

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட டி.என்.பாளையம் வனச்சரகத்தில் யானை, கரடி, புலி, சிறுத்தை, காட்டெருமை, மான் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

இங்கிருந்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சிறுத்தை ஒன்று வெளியேறி கொங்கர்பாளையம் அருகே உள்ள கொழிஞ்சிக்காடு பகுதியில் நடமாடியதை பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதனால் பீதியில் இருந்து வந்தனர்.

மீண்டும்...

இந்த நிலையில் சிறுத்தை ஒன்று மீண்டும் அதே பகுதிக்குள் புகுந்து ஆட்டையும் நாயையும் அடித்துக்கொன்றுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

கொழிஞ்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் ராசன் (வயது 49). இவர் அதே பகுதியில் குத்தகைக்கு நிலம் எடுத்து விவசாயம் பார்த்து வருகிறார். இங்குள்ள தோட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகளை கட்டி வளர்த்து வருகிறார். தோட்டத்தில் நேற்று அதிகாலையில் ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு அருகே உள்ள வீட்டில் இருந்த ராசன் அங்கு சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த ஒரு ஆட்டை காணவில்லை. இதனால் அவர் ஆட்டை தேடி சென்று பார்த்தார்.

நாய், ஆட்டை கொன்றது

அப்போது சிறிது தூரத்தில் உள்ள பாறையின் அருகே கடித்து குதறப்பட்ட நிலையில் ஒரு ஆட்டின் உடலும், நாயின் உடலும் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை, தோட்டத்துக்குள் புகுந்து ஆட்டையையும், காவலுக்காக விடப்பட்ட நாயையும் அடித்துக்கொன்றது தெரியவந்தது.

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறையினர் அங்கு சென்று சிறுத்தையின் கால்தடத்தை ஆய்வு செய்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘ஆட்டையையும், நாயையும் அடித்துக்கொன்ற சிறுத்தை மனிதர்களையும் கொல்லுவதற்கு முன்பு வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை வேண்டும்’ என்றனர்.

Next Story