சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு; ராமநாதபுரம் அருகே ஒருவர் கைது - பரபரப்பு தகவல்கள்


சப்-இன்ஸ்பெக்டர் கொலை வழக்கு; ராமநாதபுரம் அருகே ஒருவர் கைது - பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 2 Feb 2020 4:45 AM IST (Updated: 2 Feb 2020 4:44 AM IST)
t-max-icont-min-icon

களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் ராமநாதபுரம் அருகே மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான பரபரப்பு தகவல்களும் தெரியவந்தன.

பனைக்குளம் 

ராமநாதபுரம் அருகே கடந்த மாதம் 22-ந் தேதி தேவிபட்டினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்த பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் 4 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் விரட்டிச்சென்று 3 பேரை மடக்கி பிடித்தனர். ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.

பிடிபட்டவர்கள் கீழக்கரை பகுதியை சேர்ந்த புறாக்கனி என்ற பிச்சைகனி (வயது 55), கடலூர் மாவட்டம் கோண்டூர் காலனியை சேர்ந்த மணிகண்டன் என்ற முகமது அலி (28), விழுப்புரம் மாவட்டம் கிருஷ்ணாபுரம் மணல்மேடு பகுதியை சேர்ந்த முகமது அமீர் (31) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்களிடம் நடத்திய விசாரணையில் தப்பியோடிய நபர் தேவிபட்டினம் பகுதியை சேர்ந்த சேக்தாவூது (32) என்பதும், இவர் ஏற்கனவே தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்திருப்பதும் தெரியவந்தது.

சமீபத்தில் குமரி மாவட்டம் களியக்காவிளையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கைதான அப்துல் சமீம் என்பவருக்கு பணப்பரிமாற்றம் செய்வதற்கு கீழக்கரை பகுதியை சேர்ந்த முகமது ரிபாஸ் என்பவர் உதவியதாகவும், அந்த முகமது ரிபாசுக்கு மேற்கண்ட 4 பேரும் கூட்டாளிகளாக செயல்பட்டு வந்ததாகவும் பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன.

தற்போது முகமது ரிபாஸ் சிறையில் இருக்கும் நிலையில், மேற்கண்ட 4 பேரும் வாட்ஸ்-அப் குழு மூலமாக இளைஞர்களை மூளை சலவை செய்து தவறான பாதைக்கு திருப்பியதாகவும், ஐ.எஸ். தீவிரவாத அமைப்பிற்கு ஆதரவான கருத்துகளை பரப்பியதாகவும் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. மேலும் இதுதொடர்பான ஆடியோ மற்றும் ஆவணங்களை போலீசார் கைப்பற்றியதாகவும் தெரியவந்துள்ளது.

எனவே தப்பி ஓடிய சேக்தாவூதுவை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அவர், ராமநாதபுரத்தை அடுத்த சித்தார்கோட்டை மீனவ கிராமத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து நேற்று போலீசார் அங்கு விரைந்து சென்று சேக்தாவூதுவை கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். இதில் மேலும் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் சேக்தாவூது கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story