குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் தேசிய கொடி ஏந்தி ஊர்வலம்


குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் தேசிய கொடி ஏந்தி ஊர்வலம்
x
தினத்தந்தி 2 Feb 2020 4:50 AM IST (Updated: 2 Feb 2020 4:50 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் தேசிய கொடி ஏந்தி ஊர்வலம் நடத்தினர்.

ஈரோடு,

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஈரோட்டில் நேற்று ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்துக்கு மாவட்ட தலைவர் சாதிக் பாட்ஷா தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் சாகுல் அமீது, ஜாபர்சாதிக், சபியுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஈரோடு வ.உ.சி. பூங்காவில் இருந்து தொடங்கிய ஊர்வலம் சுவஸ்திக் கார்னர், மேட்டூர்ரோடு வழியாக சென்று அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதியில் நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் பலர் தேசிய கொடியை கைகளில் ஏந்தியபடி நடந்து சென்றனர்.

அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பேச்சாளர் ரகுமத்துல்லா கலந்துகொண்டு பேசினார். இதில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், தேசிய குடியுரிமை பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை அமல்படுத்தக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் சேட், ரபீக், மாவட்ட துணைத்தலைவர் ஜாபர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story