முகநூலில், பழனி கோவில் பணியாளர் என பதிவிட்டு ஐதராபாத் பக்தரிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்தவர் கைது


முகநூலில், பழனி கோவில் பணியாளர் என பதிவிட்டு ஐதராபாத் பக்தரிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்தவர் கைது
x
தினத்தந்தி 2 Feb 2020 4:15 AM IST (Updated: 2 Feb 2020 5:10 AM IST)
t-max-icont-min-icon

முகநூலில், பழனி கோவில் பணியாளர் என பதிவிட்டு, ஐதராபாத் பக்தரிடம் ரூ.1 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

பழனி, 

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் ஜனார்த்தனராவ் (வயது 48). முருக பக்தரான இவர் அடிக்கடி பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்வார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு, முகநூலில் பழனி அடிவாரம் அண்ணாநகரை சேர்ந்த அசோக் (42) என்பவர் அறிமுகமாகியுள்ளார். அப்போது முகநூல் பக்கத்தில், தான் பழனி கோவில் பணியாளர் என அசோக் பதிவிட்டுள்ளார். இதை ஜனார்த்தனராவ் உண்மை என நம்பினார். இதைத்தொடர்ந்து பழனிக்கு வரும்போதெல்லாம், ஜனார்த்தனராவை சாமி தரிசனத்துக்கு அசோக் அழைத்து சென்றுள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் 16-ந்தேதி பழனி வந்த ஜனார்த்தனராவ், சாமி தரிசனம் முடித்த பின்பு, தான் கோவில் அன்னதானத்துக்கு நன்கொடையாக பணம் கொடுக்க விரும்புவதாக அசோக்கிடம் கூறியுள்ளார். அப்போது பணத்தை என்னிடம் கொடுங்கள் நான் செலுத்திவிடுகிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து அவர் ரூ.1 லட்சத்தை அசோக்கிடம் கொடுத்துவிட்டு ஐதராபாத் சென்றுவிட்டார். பின்னர் அசோக்கிடம் பணம் கட்டியதற்கான ரசீதை கேட்கும்போது, அவர் ரசீது ஒன்றின் புகைப்படத்தை ஜனார்த்தனராவுக்கு போனில் அனுப்பியுள்ளார். அதை பார்த்தபோது, அதில் கோவில் முத்திரை எதுவும் இல்லாமல் இருந்தது.

இதனால் சந்தேகமடைந்த ஜனார்த்தனராவ், பழனி கோவில் அலுவலகத்துக்கு இ-மெயிலில் புகார் மற்றும் ரசீதின் புகைப்படத்தை அனுப்பியுள்ளார். ரசீதை கண்டதும், அது போலியானது என்பதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து கோவில் கண்காணிப்பாளர் காளியப்பன் பழனி அடிவாரம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் அசோக்கை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அன்னதானத்துக்கு நன்கொடை செலுத்துவதாக ஜனார்த்தனராவிடம் பணத்தை பெற்று, போலி ரசீதை அவருக்கு அனுப்பி ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து அடிவாரம் போலீசார் வழக்குப்பதிந்து அசோக்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story