நலவாழ்வு முகாமுக்கு சென்ற நெல்லையப்பர் கோவில் யானை ‘காந்திமதி’ திரும்பி வந்தது - 110 கிலோ எடை குறைந்ததால் உற்சாகம்


நலவாழ்வு முகாமுக்கு சென்ற நெல்லையப்பர் கோவில் யானை ‘காந்திமதி’ திரும்பி வந்தது - 110 கிலோ எடை குறைந்ததால் உற்சாகம்
x
தினத்தந்தி 2 Feb 2020 3:45 AM IST (Updated: 2 Feb 2020 7:04 AM IST)
t-max-icont-min-icon

நலவாழ்வு முகாமுக்கு சென்ற நெல்லையப்பர் கோவில் யானை ‘காந்திமதி’ நேற்று திரும்பி வந்தது. 110 கிலோ எடை குறைந்துள்ள அந்த யானை உற்சாகமாக காணப்படுகிறது.

நெல்லை,

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேட்டுப்பாளையம் அருகில் வனபத்திரகாளி அம்மன் கோவில் அருகே தேக்கம்பட்டியில் நடந்த யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாமுக்கு சென்றிருந்த நெல்லையப்பர் கோவில் யானை ‘காந்திமதி‘ நேற்று நெல்லைக்கு லாரியில் திரும்பி வந்தது. நெல்லை சந்திப்பு ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் லாரியில் இருந்து இறக்கப்பட்டு யானை, ‘காந்திமதி‘ எஸ்.என்.ஹைரோடு வழியாக நெல்லையப்பர் கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டது. எடை குறைந்து வந்துள்ள யானை ‘காந்திமதி‘ உற்சாகமாக கோவிலுக்கு நடந்து சென்றது. கோவில் முன்பு யானைக்கு சிறப்பு பூஜைகள் செய்து, உள்ளே அழைத்து செல்லப்பட்டது.

இதுகுறித்து கோவில் நிர்வாகி கூறுகையில், “ நலவாழ்வு முகாமுக்கு செல்வதற்கு முன்னர் யானை “காந்திமதி“ 4,340 கிலோ இருந்தது. தற்போது 110 கிலோ எடை குறைந்து 4,230 கிலோவாக உள்ளது. டாக்டர்கள் யானைக்கு சத்து மாத்திரைகளும், சொர்ண கல்ப லேகியமும் கொடுத்து உள்ளனர்’ என்றார்.

திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் யானைகளான குறுங்குடி வள்ளி, சுந்தரவள்ளி ஆகிய 2 யானைகளும் நேற்று காலை 9.30 மணிக்கு இருப்பிடத்துக்கு வந்தன. 2 யானைகளுக்கும் ஜீயர் மடத்தின் சார்பில் தீபாராதனைகள் காட்டப்பட்டு பூஜைகள் நடந்தது. தற்போது இந்த 2 யானைகளும் சற்று எடை அதிகரித்துள்ளன.

Next Story