வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம், சேவைகள் பாதிப்பால் வாடிக்கையாளர்கள் அவதி


வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம், சேவைகள் பாதிப்பால் வாடிக்கையாளர்கள் அவதி
x
தினத்தந்தி 2 Feb 2020 3:30 AM IST (Updated: 2 Feb 2020 8:40 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் அவதியடைந்தனர்.

விழுப்புரம்,

ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் நேற்று முன்தினம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நிலையில் நேற்றும் 2-வது நாளாக தங்கள் வேலை நிறுத்தத்தை தொடர்ந் தனர். பெரும்பாலான வங்கி ஊழியர்கள் பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

இதன் காரணமாக 2 மாவட்டங்களிலும் உள்ள சில தனியார் வங்கிகளை தவிர்த்து 160-க்கும் மேற்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் ஊழியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. ஒரு சில வங்கிகளில் ஊழியர்கள், அதிகாரிகள் யாரும் வராததால் பூட்டிக்கிடந்தன.

இந்த 2 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக வங்கிகளில் பணம் எடுக்க முடியாமலும், பணம் செலுத்த முடியாமலும், வங்கி கணக்கு புத்தகத்தில் பதிவுகள் போட முடியாதது என ஒட்டுமொத்த பரிவர்த்தனைகள் எதுவும் நடைபெறாததால் சேவைகளை பெற முடியாமல் வாடிக்கையாளர்கள் மிகவும் அவதியடைந்தனர்.

இந்த 2 நாட்களிலும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ரூ.600 கோடி அளவிற்கு காசோலை பரிமாற்றம், பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story