நாகர்கோவிலில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் திடீர் மோதல்; மீனவர் அணி தலைவர் தாக்கப்பட்டார்


நாகர்கோவிலில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் திடீர் மோதல்; மீனவர் அணி தலைவர் தாக்கப்பட்டார்
x
தினத்தந்தி 3 Feb 2020 4:30 AM IST (Updated: 3 Feb 2020 1:34 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் மோதல் ஏற்பட்டது. நாற்காலிகள் வீசப்பட்டன. இதில் மீனவர் அணி தலைவர் தாக்கப்பட்டார்.

நாகர்கோவில்,

குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடந்தது. நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக இந்த கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் மீனவரணி மாநில தலைவர் சபின் பேசினார். அப்போது, “உள்ளாட்சி தேர்தலில் சில வேட்பாளர்களை ஆதரித்து மட்டும் தலைவர்கள் பேசினார்கள். ஆனால் மற்ற வேட்பாளர்களை தலைவர்கள் கண்டுகொள்ளவில்லை“ என்று கூறினார்.

பேச்சை நிறுத்தினார்

ஆனால் அவரது பேச்சுக்கு கூட்டத்தில் இருந்த நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. எனவே அவர் தனது பேச்சை பாதியிலேயே நிறுத்தி விட்டு தனது இருக்கையில் அமர்ந்தார். எனினும் கூட்டத்தில் ஏற்பட்டு இருந்த சலசலப்பு முடிவுக்கு வரவில்லை. இதைத் தொடர்ந்து அகில இந்திய செயலாளர் சஞ்சய்தத் எழுந்து நிர்வாகிகளை அமைதிப்படுத்தினார். இதனையடுத்து கூட்டம் தொடர்ந்து நடந்தது.

தாக்குதல்-நாற்காலிகள் வீச்சு

இந்த நிலையில் கூட்டம் முடிந்ததும் அனைத்து தலைவர்களும் வெளியே செல்ல தொடங்கினார்கள். அப்போது சில நிர்வாகிகள் கும்பலாக சேர்ந்து மேடையில் நின்ற மீனவரணி மாநில தலைவர் சபினை சரமாரியாக தாக்கினர்.

இதனால் அவர் மேடையில் இருந்து கீழே இறங்கி வெளியே செல்ல முயன்றார். எனினும் அந்த கும்பல் அவரை விடவில்லை. விரட்டி விரட்டி தாக்கியது. இதனால் அங்கு நிர்வாகிகளிடையே மோதல் ஏற்பட்டது.

இந்த தாக்குதலில் சபினின் சட்டை கிழிக்கப்பட்டது. மேலும் அவர் ரத்தம் சொட்ட, சொட்ட ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதோடு கும்பலை சேர்ந்தவர்கள் நாற்காலிகளையும் தூக்கி வீசினார்கள். இதில் சில நிர்வாகிகளுக்கு காயம் ஏற்பட்டது.

பெண் நிர்வாகிகள் ஓட்டம்

கூட்டம் முடிந்த நேரத்தில் திடீரென இந்த தாக்குதல் நடந்ததால், பெண் நிர்வாகிகள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். இதைத் தொடர்ந்து நேசமணிநகர் போலீசார் அங்கு விரைந்து சென்று அனைவரையும் சமாதானம் செய்ய முயற்சித்தனர்.

இதற்கிடையே சபின் கூட்டம் நடைபெற்ற மண்டபத்தில் இருந்து சென்று விட்டார். இதனையடுத்து அனைத்து நிர்வாகிகளும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பரபரப்பு

நிர்வாகிகள் கூட்டத்தில் தாக்குதலுக்குள்ளான சபின் குளச்சலை சேர்ந்தவர் ஆவார்.

குமரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட இந்த தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story