148 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில் பாதை அமைக்கப்படும் பெங்களூரு புறநகர் ரெயில் திட்டம் 3 ஆண்டுகளில் அமல் முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்


148 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில் பாதை அமைக்கப்படும் பெங்களூரு புறநகர் ரெயில் திட்டம் 3 ஆண்டுகளில் அமல் முதல்-மந்திரி எடியூரப்பா தகவல்
x
தினத்தந்தி 3 Feb 2020 4:45 AM IST (Updated: 3 Feb 2020 3:58 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு புறநகர் ரெயில் திட்டம் 3 ஆண்டுகளில் அமலுக்கு வரும் என்றும், 148 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில் பாதை அமைக்கப்படும் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு,

மத்திய பட்ஜெட்டில் ரூ.18 ஆயிரத்து 600 கோடியில் பெங்களூரு புறநகர் ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ரூ.18 ஆயிரத்து 600 கோடி செலவில் பெங்களூரு புறநகர் ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மத்திய ரெயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்கடி மற்றும் எம்.பி.க்களின் முயற்சியால் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு மக்களின் கனவு நிறைவேறியுள்ளது. இதற்காக பிரதமர் மோடி, நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

பெங்களூரு வெளிவட்டச்சாலையை போல் 148 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இதில் 55 கிலோ மீட்டர் தூரம் உயர்த்தப்பட்ட பாதையாக அமையவுள்ளது. இ்ந்த திட்டத்தில் 57 ரெயில் நிலையங்களும், 4 வழித்தடங்களும் அமைக்கப்படுகின்றன.

அதாவது 25.1 கிலோ மீட்டர் தூரத்தில் பையப்பனஹள்ளி-பானசவாடி-யஷ்வந்தபுரம் பாதை, 35.52 கிலோ மீட்டர் தூரத்தில் கெங்கேரி-கன்டோன்மெண்ட்-ஒயிட்பீல்டு பாதை, 41.4 கிலோ மீட்டர் தூரத்தில் மாகடி ரோடு-யஷ்வந்தபுரம்-எலகங்கா பாதை, 46.24 கிலோ மீட்டர் தூரத்தில் ஹெலலிகே - பையப்பனஹள்ளி - எலகங்கா - ராஜானுகுன்டே இடையே பாதை அமைக்கப்படுகிறது.

இந்த திட்டத்திற்கான மொத்த செலவில் மத்திய-மாநில அரசுகள் தலா 20 சதவீதத்தையும், கடனாக 60 சதவீதத்தையும் திரட்டுகிறது. இந்த புறநகர் ரெயில் திட்ட ரெயில் பெட்டிகள் குளுகுளு வசதி கொண்டவை. காலை 5 மணிக்கு சேவையை தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும்.

பெங்களூருவை சுற்றியுள்ள லட்சக்கணக்கான மக்கள் இந்த திட்டத்தால் பயன் பெறுவார்கள். இந்த திட்ட பணிகள் அடுத்த 3 ஆண்டுகளில் முடிக்கப்பட்டு, சேவை தொடங்கப்படும். இந்த திட்டம் அமலுக்கு வந்த பிறகு பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் குறையும். காற்று மாசு அடைவது குறைக்கப்படும். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story