கர்நாடக மந்திரிசபை 6-ந் தேதி விரிவாக்கம் 13 எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு


கர்நாடக மந்திரிசபை 6-ந் தேதி விரிவாக்கம் 13 எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
x
தினத்தந்தி 3 Feb 2020 5:00 AM IST (Updated: 3 Feb 2020 4:05 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் வருகிற 6-ந் தேதி நடைபெறும் என்றும், 13 எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்கப்படும் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியும் ஜனதா தளம்(எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தன. குமாரசாமி தலைமையில் கூட்டணி அரசு நடைபெற்று வந்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது.

அதைத்தொடர்ந்து எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா அரசு அமைந்தது. கொறடா உத்தரவை மீறியதாக 17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அவர்களின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. அதே நேரத்தில் இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்பட்டது.

அதன் பிறகு சட்டசபையில் காலியாக இருந்த 15 இடங்களுக்கு கடந்த ஆண்டு(2019) டிசம்பர் மாதம் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 12 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றது. இந்த 12 பேரில் ஒருவரை தவிர மற்ற 11 பேரும் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சிகளில் இருந்து பா.ஜனதாவுக்கு வந்தவர்கள்.

இடைத்தேர்தலில் வெற்றி பெற்றால் அவர்களுக்கு மந்திரி பதவி வழங்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா, பிரசாரத்தில் அறிவித்தார். ஆனால் இடைத்தேர்தல் முடிவடைந்து 50 நாட்களுக்கு மேல் ஆகியும் மந்திரிசபை இன்னும் விஸ்தரிப்பு செய்யப்படவில்லை. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மந்திரி பதவியை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய பா.ஜனதா மேலிடம் ஒப்புதல் வழங்கியது.

இதையடுத்து 3 நாட்களில் மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கடந்த மாதம்(ஜனவரி) 31-ந் தேதி டெல்லியில் அறிவித்தார். அதைத்தொடர்ந்து அவர் பெங்களூருவுக்கு திரும்பினார்.

மந்திரிசபை விரிவாக்கத்தில் 13 பேருக்கு வாய்ப்பு வழங்க பா.ஜனதா மேலிடம் அனுமதி வழங்கி இருக்கிறது. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 10 பேருக்கும், கட்சியின் மூத்த எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கும் மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று மேலிட தலைவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 3-ந் தேதி (அதாவது இன்று) மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மந்திரிசபை விரிவாக்கம் வருகிற 6-ந் தேதி நடைபெறும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

‘எனது தலைமையிலான மந்திரிசபை விரிவாக்கம் வருகிற 6-ந் தேதி காலை 10.30 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடைபெறும். 13 எம்.எல்.ஏ.க்கள் மந்திரியாக பதவி ஏற்பார்கள். இதில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் 10 பேரும், கட்சியின் மூத்த எம்.எல்.ஏ.க்கள் 3 பேரும் அடங்குவர். மந்திரிசபையை மாற்றி அமைப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை.

இதுகுறித்து நாளை(அதாவது இன்று) அறிவிப்பேன். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தவர்களுக்கு மந்திரி பதவி வழங்க முடியாது. வரும் நாட்களில் அவர்களுக்கு பதவி வழங்குவது குறித்து பார்க்கலாம். 17 பேர் தங்களின் எம்.எல்.ஏ. பதவியை தியாகம் செய்ததால் கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்துள்ளது. அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவோம். அவர்களில் யாருக்கும் அநீதி இழைக்க மாட்டோம். ஆர்.சங்கரை வரும் நாட்களில் எம்.எல்.சி. ஆக்கி மந்திரி பதவி வழங்குவோம். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் எஸ்.டி.சோமசேகர், பி.சி.பட்டீல், ரமேஷ் ஜார்கிகோளி, ஸ்ரீமந்த் பட்டீல், சுதாகர், நாராயணகவுடா, சிவராம் ஹெப்பார், ஆனந்த்சிங், பைரதி பசவராஜ், கோபாலய்யா ஆகிய 10 பேருக்கும், மூத்த எம்.எல்.ஏ.க்கள் உமேஷ்கட்டி, அரவிந்த் லிம்பாவளி ஆகியோருக்கும், பா.ஜனதா ஆட்சி அமைய காரணமாக இருந்தவர்களில் ஒருவரான சி.பி.யோகேஷ்வருக்கும் மந்திரி பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் ஒருவரான மகேஷ் குமட்டள்ளி எம்.எல்.ஏ.வுக்கு மந்திரி பதவிக்கு பதிலாக கர்நாடக அரசின் டெல்லி பிரதிநிதி பதவி வழங்க எடியூரப்பா முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஆனால் அவர் தனக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மந்திரிசபை விரிவாக்கத்திற்கு பிறகு பா.ஜனதாவில் அதிருப்தியாளர்கள் போர்க்கொடி தூக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story