ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி ஒருவர் கைது


ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி ஒருவர் கைது
x
தினத்தந்தி 3 Feb 2020 4:20 AM IST (Updated: 3 Feb 2020 4:20 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி பல பேரிடம் பணமோசடி செய்தவர் போலீசில் சிக்கினார்.

புனே,

லாத்தூரை சேர்ந்தவர் கைலாஷ் (வயது24). இவர் வேலை தொடர்பாக டெல்லி சென்றிருந்தார். அப்போது அவருக்கு விஸ்வஜித் மானே(52) என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இதில் தான் ரெயில்வே பாதுகாப்பு படையில் அதிகாரியாக இருப்பதாக கூறி அதற்கான அடையாள அட்டையை காண்பித்தார். இதனை நம்பிய கைலாஷ் தனக்கு ரெயில்வேயில் வேலை வாங்கி தரும்படி கேட்டார்.

இதற்கு விஸ்வஜித் மானே ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் தந்தால் ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறினார். இதனை நம்பிய கைலாஷ் முதற்கட்டமாக ரூ.3 லட்சத்தை கொடுத்து இருந்தார். பின்னர் கைலாசிடம் ஜூனியர் குமாஸ்தாவிற்கான பணி நியமன ஆணையை விஸ்வஜித் மானே வழங்கினார்.

மேலும் மீதி பணத்தை தரும்படி கேட்டு கொண்டார். பணி நியமன ஆணையை பெற்று கொண்ட கைலாஷ் புனேயில் உள்ள ரெயில்வே மேலாளரை சந்தித்து பேசினார். அப்போது அந்த நியமன ஆணையை வாங்கி பார்த்த மேலாளர், அது போலியானது என தெரிவித்தார். மேலும் சம்பவம் குறித்து போலீசில் ரெயில்வே மேலாளர் புகார் அளித்தார்.

இந்த புகாரின் படி போலீசார் கைலாஷை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் விஸ்வஜித் மானே தான் போலி பணி நியமன ஆணையை வழங்கியது தெரியவந்தது. உடனடியாக அவரை பிடிக்க கைலாஷ் மூலம் மீதி பணம் தருவதாக கூறி விஸ்வஜித் மானேவை வரவழைத்தனர். அதன்படி பணம் வாங்க வந்த அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், போலி அடையாள அட்டை தயாரித்து இதேபாணியில் பல பேரிடம் பணமோசடி செய்தது தெரியவந்தது.

Next Story