புதுவையில் குவிந்த சுற்றுலா பயணிகள்


புதுவையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 3 Feb 2020 5:05 AM IST (Updated: 3 Feb 2020 5:05 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

புதுச்சேரி,

புதுவை அரசு சுற்றுலாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. எனவே தொடர் விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வருகை தருகிறார்கள். இவர்கள் தவிர வெளிநாட்டினரும் அதிகளவில் வருகின்றனர்.

சுற்றுலா பயணிகள் புதுவை கடற்கரை, பாரதி பூங்கா, தாவரவியல் பூங்கா, நோணாங்குப்பம் படகு குழாம், ஊசுட்டேரி, மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று பொழுதை மகிழ்ச்சியுடன் கழிப்பார்கள்.

இந்த நிலையில் வார விடுமுறை நாளான நேற்று புதுவையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். முக்கிய சாலைகளில் சுற்றுலா பயணிகளின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது. மாலையில் கடற்கரை சாலையில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

அவர்கள் புதுவை தலைமை செயலகம் எதிரே உள்ள செயற்கை மணல் பரப்பு மற்றும் பழைய துறைமுகம் அருகே கடலில் இறங்கி தண்ணீரில் கால்களை நனைத்து விளையாடி மகிழ்ந்தனர். இதே போல் புதுவை நோணாங்குப்பம் படகு குழாமிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது. இதன் காரணமாக அவர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று படகு சவாரி செய்தனர்.

புதுவையில் சண்டே மார்க்கெட் நடைபெறும் காந்தி வீதியில் மக்கள் கூட்டம் அலை மோதியது. பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான பொருட்களை பேரம் பேசி வாங்கி சென்றனர்.

சுற்றுலா பயணிகளின் வருகையால் புதுச்சேரி நகரின் முக்கிய சாலைகளில் போக்கு வரத்து நெரிசல் காணப்பட்டது. போக்குவரத்து போலீசார் அங்கு விரைந்து சென்று வாகனங்களை ஒழுங்கு படுத்தி, போக்குவரத்தை சரிசெய்தனர்.

Next Story