குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, கோவையில் முஸ்லிம் இயக்க கூட்டமைப்பினர் பேரணி - ஏராளமானோர் பங்கேற்பு
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கோவையில் முஸ்லிம் இயக்க கூட்டமைப்பினர் பேரணி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கோவை,
மத்திய அரசு கொண்டு வந்து உள்ள குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ.), தேசிய குடியுரிமை பதிவேடு (என்.ஆர்.சி.), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த சட்டங்களை எதிர்த்து கோவை மாவட்ட அனைத்து ஜமாத் மற்றும் முஸ்லிம் இயக்க கூட்டமைப்பு சார்பில் வ.உ.சி. மைதானத்தில் இருந்து அவினாசி சாலை வழியாக கொடிசியா மைதானம் வரை பேரணியாக செல்ல அனுமதி கேட்கப்பட்டது.
இந்த சாலையில் போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்பதால், பேரணியாக செல்ல போலீசார் அனுமதி வழங்கவில்லை. எனவே உக்கடத்தில் இருந்து ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள செஞ்சிலுவை சங்கம் வரை பேரணியாக செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து நேற்று பேரணி நடந்தது. இதற்காக உக்கடத்தில் நேற்று மதியம் சுன்னத் ஜமாத் கொள்கை கூட்டமைப்பு, ஜமாத்துல் உலமா சபை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் உள்பட அனைத்து முஸ்லிம் இயக்கங்களை சேர்ந்தவர்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் ஒருங்கிணைப்பாளர் ராஜா உசேன் தலைமையில் செஞ்சிலுவை சங்கம் நோக்கி பேரணியாக வந்தனர்.
இந்த பேரணியில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் என ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கை குறித்த வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர். இதில் சமூக நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி ஒரு சிறுவன் காவி துண்டு, கழுத்தில் மாலை அணிந்தபடி கலந்து கொண்டான்.
மேலும் இதில் 670 அடி நீள தேசிய கொடியை ஏராளமான இளைஞர்கள் பிடித்தபடி கலந்து கொண்டனர். சிலர் முரசுகளை கொட்டி கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.
பேரணி செஞ்சிலுவை சங்கம் வந்ததும், அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மத்திய அரசை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டை திரும்ப பெறக்கோரி கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்காக செஞ்சிலுவை சங்கத்தில் உள்ள ரவுண்டானா அருகில் மேடை போடப்பட்டு இருந்தது.
மேடைக்கு பின்புறமும், முன்புறமும் ஏராளமானோர் கூடி இருந்தனர். பலர் தங்கள் கைகளில் தேசிய கொடியையும், வேண்டாம் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர். என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் கையில் ஏந்தி நின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ., தி.மு.க.வை சேர்ந்த நா.கார்த்திக் எம்.எல்.ஏ., தமிழக காங்கிரஸ் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், பாப்புலர் பிரண்ட் மாநில துணைத்தலைவர் ஷேக் முகமது அன்சாரி, எஸ்.டி.பி.ஐ. மாநில பொதுச்செயலாளர் நிஜாம் மைதீன், தமிழ்புலிகள் மாநில தலைவர் நாகை திருவள்ளுவன், நாம் தமிழர் கட்சி மண்டல செயலாளர் அப்துல் வஹாப் உள்பட பல்வேறு அமைப்புகள் மற்றும் முஸ்லிம் இயக்க கூட்டமைப்பின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 14, 15-ம் பிரிவுக்கு எதிராக கொண்டு வந்து உள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும், நாடு முழுவதும் நடத்த உள்ள தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு எவ்வித ஒத்துழைப்பும் வழங்கக்கூடாது, மக்களை மதத்தின் அடிப்படையில் பிரிக்க முனையும் தேசிய குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை தமிழகத்தில் செயல்படுத்த மாட்டோம் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
டெல்லியில் அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டிப்பது, சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி. சட்டங்களுக்கு எதிராக கருத்துக்களை பேசும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு அச்சுறுத்தல் கொடுப்பதை கண்டிப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த பேரணியையொட்டி மாநகர போலீஸ் கமிஷனர் சுமித் சரண் தலைமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுதவிர துப்பாக்கிகளை ஏந்திய அதிவிரைவுப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வ.உ.சி. மைதானத்துக்குள் யாரும் சென்றுவிடக்கூடாது என்பதற்காக அந்த மைதானத்தை சுற்றிலும் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர்.
மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தடுக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசும் எந்திரமும் கொண்டு வரப்பட்டு இருந்தது. பேரணி காரணமாக சில இடங்களில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டு இருந்தன. சில இடங்களில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக மாநகர பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Related Tags :
Next Story