வள்ளியூரில், அரசு ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை - மர்மநபர்களுக்கு வலைவீச்சு
வள்ளியூரில் அரசு ஊழியர் வீட்டில் 10 பவுன் தங்கநகைகளை கொள்ளை அடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
வள்ளியூர்,
நெல்லை மாவட்டம் வள்ளியூர் எஸ்.கே.பி. நகர் 8-வது தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து (வயது 45). இவர் சேரன்மாதேவி உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி சங்கரி. இவர் ராமேஸ்வரத்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சங்கரி ராமேஸ்வரத்தில் தனது மகன்களுடன் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். இசக்கிமுத்து மட்டும் வள்ளியூர் எஸ்.கே.பி நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.
விடுமுறை நாட்களில் இசக்கிமுத்து வள்ளியூரில் இருந்து ராமேஸ்வரத்திற்கு செல்வது வழக்கம். அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று இசக்கிமுத்து தனது வீட்டின் கதவை பூட்டி விட்டு ராமேஸ்வரத்திற்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் இசக்கிமுத்து வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடப்பதை கண்டு, அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர். அப்போது பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனே இதுதொடர்பாக ராமேஸ்வரத்தில் உள்ள இசக்கிமுத்துவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் வள்ளியூர் போலீசுக்கும் தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பொன்சன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நேற்று காலையில் ராமேஸ்வரத்தில் இருந்து இசக்கிமுத்து வந்த பின்பு போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் அகஸ்டா, ரமயிராஜ் ஆகியோர் வந்து தடயங்களை பதிவு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story