தூத்துக்குடியில், ரெயிலில் அடிபட்டு அ.ம.மு.க. பிரமுகர் சாவு - போலீஸ் விசாரணை


தூத்துக்குடியில், ரெயிலில் அடிபட்டு அ.ம.மு.க. பிரமுகர் சாவு - போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 3 Feb 2020 3:45 AM IST (Updated: 3 Feb 2020 7:40 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ரெயிலில் அடிபட்டு அ.ம.மு.க. பிரமுகர் பரிதாபமாக இறந்தார். இதுபற்றிய விவரம் வருமாறு:-

தூத்துக்குடி,

தூத்துக்குடி வி.எம்.எஸ். நகர் அருகே நேற்று காலையில் ரெயிலில் அடிபட்டு ஒரு வாலிபர் இறந்த நிலையில் கிடந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அவர்கள் தூத்துக்குடி ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்த வாலிபர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், இறந்து கிடந்த வாலிபர் மில்லர்புரம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த சுப்பையா மகன் பார்வதிராஜா (வயது 29) என்பது தெரியவந்தது. இவர் கார் டிரைவர் ஆவார். மேலும் அ.ம.மு.க. கட்சி பிரமுகராக இருந்தார்.

பார்வதி ராஜா கடந்த 2014-ம் ஆண்டு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பார்வதிராஜா ரெயிலில் அடிபட்டு இறந்து இருப்பதால், அவர் தற்கொலை செய்து கொண்டாரா, வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்று ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story