அந்தியூர் அருகே, குடிநீருடன் சாக்கடை கழிவு கலக்கும் அபாயம்


அந்தியூர் அருகே, குடிநீருடன் சாக்கடை கழிவு கலக்கும் அபாயம்
x
தினத்தந்தி 3 Feb 2020 4:00 AM IST (Updated: 3 Feb 2020 9:41 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர் அருகே குடிநீருடன் சாக்கடை கழிவுநீருடன் கலக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

அந்தியூர்,

அந்தியூர் பேரூராட்சி பகுதிக்கு அத்தாணி அருகே உள்ள பவானி ஆற்றில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக 10 கிலோ மீட்டர் தூரத்தில் அந்தியூர் தவுட்டுப்பாளையத்தில் உள்ள மேல்நிலை தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்படுகிறது. இதன் மூலம் அந்தியூர் பகுதியில் உள்ள 4 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

பவானி ஆற்றில் இருந்து தவுட்டுப்பாளையத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு பெரிய சிமெண்டு குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்படுகிறது. அவ்வாறு கொண்டுவரப்படும் சிமெண்டு குழாய்கள் சின்னதம்பிபாளையம் பாலம் வழியாக எடுத்து செல்லப்படுகிறது. அந்த பாலம் உள்ள பகுதியில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் குடிநீர் குழாயானது சாக்கடை கழிவுநீரில் மூழ்கியபடி இருக்கிறது.

அவ்வாறு தேங்கி நிற்கும் சாக்கடை கழிவுநீரானது சிமெண்டு குழாய்க்குள் கசிந்து செல்ல வாய்ப்பு உள்ளது. இதன்காரணமாக குடிநீர் மாசுபடுவதுடன், சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு தொற்றுநோய்களும் உண்டாகும்.

இதுகுறித்து சின்னத்தம்பிபாளையம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் கூறுகையில், ‘குடிநீருடன் சாக்கடை கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே பாலம் உள்ள பகுதியில் சாக்கடை கழிவுநீர் தேங்காமல் நடவடிக்கை எடுப்பதுடன், சிமெண்டு குழாயை பாதுகாப்பான முறையில் கொண்டு செல்ல அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.

Next Story