ஊத்துக்குளி அருகே லாரியில் திடீர் தீ - ரூ.15 லட்சம் பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசம்


ஊத்துக்குளி அருகே லாரியில் திடீர் தீ - ரூ.15 லட்சம் பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 3 Feb 2020 3:30 AM IST (Updated: 3 Feb 2020 9:46 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்குளி அருகே லாரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள பஞ்சு மூட்டைகள் எரிந்து நாசம் அடைந்தன.

ஊத்துக்குளி,

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே வெண்கலப்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை கர்நாடக மாநிலம் கூப்ளி பகுதியிலிருந்து நூற்பாலைக்கு தேவையான 97 பஞ்சு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை மேற்குதெரு பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் (வயது 41) என்பவர் ஓட்டி வந்தார். லாரி ஊத்துக்குளியை அடுத்த ஆயிஅம்மன் கோவில் அருகே வந்தபோது சாலையோரம் தாழ்வாக சென்ற மின் கம்பியில் பஞ்சு மூட்டை உரசியது. இதனால் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது.

லாரியின் பின்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறுவதை கண்ட டிரைவர் ரமேஷ்குமார் அதிர்ச்சி அடைந்தார். உடனே லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கி தப்பித்தார். மேலும் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவர் தீயை அணைக்க முயற்சி மேற்கொண்டார். அதற்குள் தீ மளமளவென லாரியின் அனைத்து பகுதிக்கும் பரவியது.

உடனடியாக இது குறித்து தீயணைப்பு துறையினருக்கும் ஊத்துக்குளி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் காங்கேயம் மற்றும் திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் லாரியில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயற்சி மேற்கொண்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு லாரியில் பற்றிய தீயை அணைத்தனர். அதற்குள் லாரி முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக காட்சியளித்தது. தீயில் எரிந்து சேதமான பஞ்சின் மதிப்பு ரூ.15 லட்சம் என்றும், லாரியின் மதிப்பு ரூ.10 லட்சம் எனவும் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து ஊத்துக்குளி சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story