குரூப்-2ஏ தேர்வில் தென்மாவட்டத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் முறைகேடாக தேர்ச்சி? சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை
குரூப்-2ஏ தேர்வில் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ்காரரின் மனைவியை தொடர்ந்து புதிதாக உருவான தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் முறைகேடாக தேர்ச்சி பெற்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ள நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
விருதுநகர்,
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு மோசடி தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டதில் சென்னையில் ஆயுதப்படை பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் சித்தாண்டி என்பவரின் மனைவி பிரியா, அவரது சகோதரர்கள் வேல்முருகன், கார்த்தி ஆகியோர் குரூப்-2ஏ தேர்வில் கடந்த 2017-ம் ஆண்டு முறைகேடாக தேர்ச்சி பெற்று அரசு பணியாற்றி வருவது தெரியவந்தது.
ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் சித்தாண்டி தற்போது தலைமறைவாக உள்ள நிலையில் அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வருகின்றனர். சித்தாண்டி மாநில அளவில் உயர் பதவி வகித்த போலீஸ் அதிகாரிகளுக்கு வாகன ஓட்டுனராக பணியாற்றியதை தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி. வட்டாரத்தில் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் குரூப்-2ஏ தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீசில் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் புகார் செய்தனர். இந்த முறைகேடும் குரூப்-4 தேர்வு முறைகேடு விசாரணையின் போது தான் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார், காரைக்குடி முத்துப்பட்டினத்தில் பத்திரப்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றும் வேல்முருகனை விசாரணை வளையத்தில் கொண்டு வந்தனர். விசாரணையில் அவர் முறைகேடாக தேர்வு எழுதி 285 மதிப்பெண்கள் பெற்று தரவரிசை பட்டியலில் 8-வது இடத்தை பிடித்து பணி நியமனம் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையொட்டி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் தொடர் விசாரணையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள முத்துலிங்காபுரத்தைச் சேர்ந்த ஜெயராணி (வயது30) என்பவரும் முறைகேடாக குரூப்-2ஏ தேர்வில் வெற்றி பெற்று நெல்லை சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றி வருவது தெரியவந்தது. ஜெயராணி முறைகேடாக தேர்வு எழுதி 276 மதிப்பெண்கள் பெற்று தரவரிசை பட்டியலில் 21-வது இடத்தை பிடித்து பணிநியமனம் பெற்றுள்ளார். இதனைதொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நெல்லையில் ஜெயராணியை கைது செய்தனர்.
ஜெயராணியின் கணவர் முத்து ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். ஜெயராணி முறைகேடாக தேர்ச்சி பெற்றதற்கு அவரது கணவர் போலீஸ்காரர் முத்து ஏற்பாடு செய்தது தெரியவந்த நிலையில் அவரிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆனால் அவரும் தற்போது பணிக்கு வராததால் அவரிடம் மேற்கொள்ளப்படவேண்டிய விசாரணை தாமதமாகி வருகிறது.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேட்டை பொறுத்தமட்டில் பல மாவட்டங்களை சேர்ந்தவர்கள் முறைகேடாக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றது தெரியவந்துள்ள நிலையில் அந்தந்த மாவட்டங்களிலுள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் விசாரணையை ஒப்படைக்காமல் சென்னை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு குழுவினரே நேரடியாக விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தலைமறைவாகி உள்ள இன்ஸ்பெக்டர் சித்தாண்டி, சகோதரர் வேல்முருகனுடன் இணைந்து ஆதாயம் பெற்றுக்கொண்டு குரூப்-2ஏ தேர்வில் 50-க்கும் மேற்பட்டோர் முறைகேடாக தேர்ச்சி பெற ஏற்பாடு செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. முறைகேடாக தேர்ச்சி பெற்றோர்களில் 50-க்கும் மேற்பட்டோர் புதிதாக உருவான தென்காசி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அந்த பகுதியில் விசாரணையை தீவிரப்படுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.
குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திய போது குரூப்-2ஏ தேர்வு முறைகேடு வெளிவர தொடங்கியது. தற்போது குரூப்-2ஏ தேர்வு விசாரணை தொடங்கி இருக்கும் நிலையில் இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு முழுமையாக விசாரணை செய்யும் போது வேறு ஏதேனும் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்தும் தகவல் வெளிவருமா என தேர்வாளர்கள் மத்தியில் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.
மொத்தத்தில் டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு தொடர்பான விசாரணை தொடர் சங்கிலி போல் நீள்வதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விசாரணை முடிவில் தான் முறைகேட்டிற்கு மூளையாக செயல்பட்டது யார், யார் என்பது தெரியவரும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு நாடு முழுவதும் இருந்து வரும் நற்பெயருக்கு தற்போது வெளியாகியுள்ள முறைகேடுகள் கரும்புள்ளியை ஏற்படுத்திவிட்டது.
இனியாவது தமிழக அரசு, அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் முறைகேடுகள் முற்றிலுமாக தவிர்க்கப்பட ஒரு புதிய நடைமுறை திட்டத்தை அமலுக்கு கொண்டு வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Related Tags :
Next Story