ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் 2 ஆண்டுகளில் தூய்மையான மதுரையை பார்க்கலாம் - அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் இன்னும் 2 ஆண்டுகளில் தூய்மையான மதுரையை பார்க்கலாம் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.
மதுரை,
மதுரை மாநகராட்சி சார்பாக நம்ம மதுரை என்ற நிகழ்ச்சி தெப்பக்குளத்தில் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் விசாகன் தலைமை தாங்கினார். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுரையை சீர்மிகு தூய்மையான நகரமாக மாற்றுவதற்கான பணியை பொதுமக்களிடமும், மாணவ, மாணவிகளிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த நம்ம மதுரை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதில் சிறுவர்களுக்கான கபடி போட்டி, சிறப்பு பட்டிமன்றம், வைகை ஆறு தூய்மைப்படுத்துதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் ஒரு முடிவு எடுக்க வேண்டும். குப்பைகளை கண்ட இடத்தில் கொட்டக்கூடாது, நீர்நிலைகளில் குப்பைகளை போடக்கூடாது, குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும்.
மதுரை மாநகருக்கு 24 மணி நேரமும் குடிநீர் கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முல்லை-பெரியாறு லோயர் கேம்ப் குடிநீர் திட்டம் செயல்படுத்துவதற்கான திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. மதுரை மாநகராட்சியில் பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த 2 ஆண்டுகளில் எழில்மிகு மற்றும் தூய்மையான மதுரையை அனைவரும் பார்க்கலாம். 40 ஆண்டுகளுக்கு பிறகு தெப்பக்குளத்தில் நிரந்தரமாக நீர் நிரப்புவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் துணை கமிஷனர் நாகஜோதி, நகர்பொறியாளர் அரசு, உதவி கமிஷனர்கள் பழனிச்சாமி, பிரேம்குமார், விஜயா, சேகர், நகர்நல அலுவலர் செந்தில்குமார், செயற்பொறியாளர்கள் ராஜேந்திரன், முருகேசபாண்டியன், மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story