மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்


மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
x
தினத்தந்தி 4 Feb 2020 3:45 AM IST (Updated: 3 Feb 2020 7:28 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார்.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பொது மக்களிடம் இருந்தும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்தும் பல்வேறு கோரிக்கை மனுக்களை கலெக்டர் நேரில் பெற்று கொண்டார். 

இதில் கல்வி உதவித்தொகை, வங்கிக்கடனுதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 620 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் வழங்கி அதன் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். 

மேலும் நிலுவையிலுள்ள மனுக்களின் மீது எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 6 பேருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையாக தலா மாதம் ரூ.1000மும், 5 பேருக்கு விதவை உதவித்தொகையாக தலா மாதம் ரூ.1000மும், இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஒருவருக்கு மாதம் உதவித்தொகையாக ரூ.1000மும், ஒருவருக்கு இயலாமை உதவித்தொகையாக ரூ.1000மும், ஒருவருக்கு முதியோர் உதவித்தொகையாக ரூ.1000மும், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒருவருக்கு மாதம் உதவித்தொகையாக ரூ.1000மும், ஒருவருக்கு விபத்து நிவாரண தொகையாக ரூ.50 ஆயிரமும், ஒருவருக்கு இயற்கை மரண உதவித்தொகையாக ரூ.22 ஆயிரத்து 500ம், ஒருவருக்கு வீட்டு மனை பட்டா பெறுவதற்கான ஆணையிணையும் கலெக்டர் நலத்திட்ட உதவிகளாக வழங்கினார்.

 கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் லாவண்யா, மாவட்ட வழங்கல் அலுவலர் அரிதாஸ், மாவட்ட மேலாளர் தாட்கோ ஏழுமலை, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கதிர்சங்கர், மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் இளங்கோ, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story