திருப்பத்தூர் மெயின் ரோட்டில் கனரக வாகனங்கள் குறிப்பிட்ட நேரங்களில் நுழைய தடை ; கலெக்டர் உத்தரவு


திருப்பத்தூர் மெயின் ரோட்டில் கனரக வாகனங்கள் குறிப்பிட்ட நேரங்களில் நுழைய தடை ; கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 4 Feb 2020 4:00 AM IST (Updated: 3 Feb 2020 7:49 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மெயின் ரோட்டில் நாளை முதல் கனரக வாகனங்கள் குறிப்பிட்ட நேரங்களில் நுழைய தடை விதித்து கலெக்டர் சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

திருப்பத்தூர், 

தாமலேரிமுத்தூர் மேம்பாலம் முதல் திருப்பத்தூர் தெற்கு எல்லை வரை சேலம்– வாணியம்பாடி நெடுஞ்சாலை வழியாக பிற மாவட்டங்களுக்கு செல்லும் கனரக மற்றும் மிக கனரக வாகனங்கள் செல்வதால் திருப்பத்தூர் நகர பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.

கனரக வாகனங்கள் அதிக பாரம் ஏற்றி வருவதால் சாலைகள் மேலும் பழுதாகும் சூழல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மேலும் வாணியம்பாடி சுங்கச்சாவடி சுங்கவரியினை தவிர்க்கும் வகையில் பல மாவட்ட வாகனங்கள் அதிக பாரம் ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் வழியாக செல்கின்றன.

திருப்பத்தூர் மாவட்ட பொதுமக்களின் நலன் கருதி நாளை (புதன்கிழமை) முதல் குறிப்பிடட நேரங்களில் கனரக வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 3.30 முதல் இரவு 9 மணி வரையிலும் மறு உத்தரவு வரும் வரை மேற்கண்ட நெடுஞ்சாலையை பயன்படுத்தி வெளியூர் செல்லும் கனரக மற்றும் மிக கனரக வாகனங்கள் திருப்பத்தூர் நகர பகுதிகளில் நுழையத் தடை விதிக்கப்படுகிறது. மேலும் ஆட்டோக்கள் தங்கள் பகுதிக்கு ஒதுக்கப்பட்ட மாற்று இடத்தை பயன்படுத்துமாறு ஆணை பிறப்பிக்கப்படுகிறது.

திருப்பத்தூர் நகரத்திற்குள் வரவேண்டிய திருப்பத்தூர் சுற்றியுள்ள கிராம பகுதிகளான வெங்களாபுரம், கொரட்டி மற்றும் பிற பகுதிகளிலிருந்து வரும் ஆட்டோக்கள் அனைத்தும் திருப்பத்தூர் புதுப்பேட்டை ரோட்டில் உள்ள இளங்கோ ஓட்டல் வழியாக பால முருகன் தியேட்டர் எதிரில் உள்ள வழியில் வந்து புதுப்பேட்டை ரோடு வழியாக வர வேண்டும். புதுப்பேட்டையில் இருந்து வரும் ஆட்டோக்கள் அனைத்தும் எம்.ஜி.ஆர். சிலை வழியாக திரும்பி ஆரி செட்டித் தெரு வழியில் சென்று ரெயில்வே ஸ்டே‌ஷன் ரோட்டில் உள்ள வடமலை பவனில் திரும்பி பெரியகுளம் மேடு வழியாக சென்று பழைய பஸ் நிலையம் சென்று பொதுமக்களை இறக்கிவிட வேண்டும்.

 மீண்டும் பொதுமக்களை ஏற்றிக் கொண்டு அதே வழியில் ஒன்றன்பின் ஒன்றாக திரும்பிச் செல்ல வேண்டும்.

இந்த சாலையில் இருக்கிற ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும். திருப்பத்தூர் நகரின் பிரதான சாலையில் செல்வதற்குஆட்டோக்களுக்கு வருகிற 5–ந் தேதி முதல் கண்டிப்பாக அனுமதி இல்லை. ஜோலார்பேட்டை மார்க்கத்தில் இருந்து வரும் ஆட்டோக்கள் நியூ சினிமா தியேட்டர் அருகிலேயே பயணிகளை இறக்கிவிட்டு திரும்பவும், அதே இடத்தில் இருந்து பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும் திருப்பத்தூர் நகருக்குள் நுழையும் ஆட்டோக்கள் புதுப்பேட்டை ரோடு முதல் ஆசிரியர் நகர் பேருந்து நிறுத்தம் வரைஆட்டோ ஸ்டேண்ட் செய்ய அனுமதி இல்லை என்றும் அனைத்து ஆட்டோக்களும் பழைய பஸ் நிலையத்தினை ஆட்டோ ஸ்டாண்ட்டாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 


Next Story