தற்கொலை செய்த என்ஜினீயரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவரக்கோரி மனு


தற்கொலை செய்த என்ஜினீயரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவரக்கோரி மனு
x
தினத்தந்தி 3 Feb 2020 10:15 PM GMT (Updated: 3 Feb 2020 3:25 PM GMT)

தாய்லாந்து சிறையில் தற்கொலை செய்த என்ஜினீயரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவரக்கோரி, குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.

கரூர், 

தாய்லாந்து சிறையில் தற்கொலை செய்த என்ஜினீயரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவரக்கோரி குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதற்கு கூட்டத்திற்கு வருவாய் அதிகாரி ராஜேந்திரன் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்றார். 

கூட்டத்தில், கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் சித்தலவாடி ஊராட்சியின் 8–வது வார்டு உறுப்பினர் மகிளிப்பட்டி பிரகாஷ் அளித்த மனுவில், மகளிப்பட்டி பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக சேதம் அடைந்துள்ள கட்டளை மேட்டு வாய்க்கால், புதிய கட்டளை மேட்டு வாய்க்காலின் குறுக்கேயுள்ள 2 பாலங்கள் பழுதடைந்து உள்ளதால் போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் உள்ளது. எனவே இதனை சீரமைத்து தர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் எங்கள் பகுதியில் குண்டும், குழியுமாக உள்ள தார்சாலையை சீர் செய்து தர வேண்டும் என்று கூறியிருந்தார். கரூரில் அம்பேத்கருக்கு சிலை நிறுவ அனுமதி கேட்டு சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் சிலை அமைப்புக்குழு சார்பில் மனு அளிக்கப்பட்டது.

கிருஷ்ணராயபுரம் வட்டம் மேட்டுமகாதானபுரத்தில் ஒரு கோவில் நில ஆக்கிரமிப்பை அகற்றகோரி அப்பகுதியை சேர்ந்த பெரியசாமி மனு கொடுத்திருந்தார். 

கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சிதுறை ஊழியர்கள் சங்கம் சார்பில் அளித்த மனுவில், 1972–ம் ஆண்டு பணிக்கொடை சட்ட கட்டுப்பாட்டு அதிகாரி உத்தரவுப்படி கிராம ஊராட்சி ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்கப்படுகிறது. இதில் கரூர் மாவட்டத்தில் 10–க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு பணிக்கொடை உத்தரவு பெற்றும் அது வழங்கப்படாததால் திண்டுக்கல் தொழிலாளர் துணை ஆணையர் வருவாய் வசூல் சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு பணிக்கொடை பெற்றுத்தர உத்தரவிட்டு 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே கரூர் மாவட்டத்தில் பணிஓய்வுபெற்ற கிராம ஊராட்சி மேல்நிலைநீர்தேக்க தொட்டிய இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு பணப்பயன்களை வழங்கிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

வெள்ளியணை தென்பாகம் மேட்டுப்பட்டியை சேர்ந்த சமூக ஆர்வலம் அப்புசாமி அளித்த மனுவில், வெள்ளியணை பெரியகுளத்தினை தூர்வாரி அதில் கரைகளை பலப்படுத்திட வேண்டும் என்று கூறியிருந்தார்.

 உப்பிடமங்கலம் பேரூராட்சி சின்னாகவுண்டனூர் அருந்ததியர் தெருவை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் ஊரில் சுடுகாட்டில் பாதுகாப்பு கருதி சுற்றுசுவர் அமைத்து தர வேண்டும். எங்கள் பகுதியில் உள்ள அனைத்து தெருக்களுக்கு சிமெண்டு சாலை அமைத்து தர வேண்டும். குடிநீரை சேமித்து வைத்து வினியோகம் செய்யும் வகையில் மேல்நிலைநீர்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் தனிநபர் இல்ல கழிப்பறை கட்டித்தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கரூர் மாவட்ட தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் மற்றும் பொதுமக்கள் நல்லுறவு கமிட்டி சார்பில் அளித்த மனுவில், கரூர் மாவட்டத்தில் அழைத்த உடனேயே ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கும் வகையில் ஆம்புலன்சை இயக்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கிருஷ்ணராயபுரம் தாலுகா சித்தலவாய் ஊராட்சி சங்கரன்மலைப்பட்டியை சேர்ந்த தனலட்சுமி தனது உறவினர்களுடன் திரண்டு வந்து அளித்த மனுவில், எனது மகன் பிரகாஷ் (வயது 26) என்ஜினீயராக பணியாற்ற கடந்த 2017–ம் ஆண்டு ஜனவரி மாதம் தாய்லாந்து நாட்டிற்கு சென்றார். இந்த நிலையில் 2018–ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அங்கு கொலை வழக்கில் குற்றவாளியாக அங்கு பிரகாஷ் சிறை தண்டனை அனுபவித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2–ந்தேதி சிறைக்குள்ளேயே பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டதாக, கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மூலமாக தகவல் கிடைக்க பெற்றது. நான் கணவரை இழந்த ஏழை கூலித்தொழிலாளி. எனவே எனது மகனின் உடலை தாய்லாந்திலிருந்து மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வந்து ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். மனுக்களை பெற்று கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பதில் கூறினார்.

Next Story