கொரோனா வைரஸ் பீதி: வெளிநாடு செல்வதை ஒத்தி வைத்த திருச்சி பயணிகள்


கொரோனா வைரஸ் பீதி: வெளிநாடு செல்வதை ஒத்தி வைத்த திருச்சி பயணிகள்
x
தினத்தந்தி 4 Feb 2020 3:45 AM IST (Updated: 3 Feb 2020 9:31 PM IST)
t-max-icont-min-icon

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று நோயால் 300–க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஏராளமான பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செம்பட்டு,

உலக நாடுகள் பலவற்றில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால் மக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனாவில் இருந்து கேரளா திரும்பிய 2 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு கேரளாவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதேபோன்று சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த மதுரை வாலிபர் ஒருவருக்கு சளி, காய்ச்சல் இருந்தது மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் அந்த வாலிபரை அவரது சொந்த ஊரான கொட்டாம்பட்டிக்கு அனுப்பாமல் மருத்துவ சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 இந்த வைரஸ் பீதியால், திருச்சியில் இருந்து வெளிநாடு செல்பவர்கள் பயணத்தை தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை, சார்ஜா ஆகிய நாடுகளுக்கு நேரடியாக விமான சேவை உள்ளது. 

அந்த நாடுகளுக்கு திருச்சி உள்பட பக்கத்துக்கு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் தினமும் இந்த நாடுகளுக்கு வேலை மற்றம் கல்வி, சுற்றுலாவுக்கு சென்று வருகின்றனர். 

கொரோனா வைரஸ் பீதியால் பலரும் தங்கள் பயணத்தை தள்ளிப் போடுகின்றனர். இதுபற்றி விமான நிறுவன அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ஒன்றிரண்டு நாட்கள் தான் பயணத்தை தள்ளிப் போடுகிறார்கள். மொத்தமாக டிக்கெட் ரத்து செய்யப்படவில்லை என்றார்.

Next Story