தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தாய்-மகள் உள்பட 4 பேர் தீக்குளிக்க முயற்சி


தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தாய்-மகள் உள்பட 4 பேர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 3 Feb 2020 11:00 PM GMT (Updated: 3 Feb 2020 7:03 PM GMT)

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் தாய்-மகள் உள்பட 4 பேர் தீக்குளிக்க முயன்றனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தர்மபுரி,

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. புட்டிரெட்டிப்பட்டியை சேர்ந்த பழனியம்மாள் அவருடைய மகள் சைலஜா ஆகியோர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அப்போது அவர்கள் 2 ேபரும் திடீரென தங்கள் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் விைரந்து சென்று 2 பேரையும் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது பழனியம்மாளின் தந்தை பெயருக்கு வந்த வீட்டுமனை பட்டாவை அருகே வசிக்கும் ஒருவர் தனக்கு வந்த பட்டா எனக்கூறி வாங்கி வைத்து கொண்டு தர மறுப்பதாகவும், தனக்குரிய பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரி தீக்குளிக்க முயன்றதாகவும் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளி

இதேபோல் பாலக்கோடு தாலுகா பேளாரஅள்ளியை சேர்ந்த மாற்றுத்திறனாளி சங்கர் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மதியம் உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள்.

அப்போது சங்கர் அந்த பகுதியை சேர்ந்த ஒருவரிடம் நிலம் வாங்க ரூ.10 லட்சம் கொடுத்துள்ளேன். அவர்கள் நிலத்தை பத்திரம் செய்து தராமல் அலைக்கழித்து வருகின்றனர். மேலும் அவர்கள் பணத்தையும் திருப்பி தர மறுகின்றனர். இதனால் தீக்குளிக்க முயன்றதாக அவர் தெரிவித்தார்.

மனைவியை சேர்த்து வைக்க வேண்டும்

இதேபோல் காரிமங்கலம் பகுதியை சேர்ந்த சின்னசாமி என்பவர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தபோது போலீஸ்காரராக பணிபுரியும் தனது மனைவி தன்னை பிரிந்து சென்று விட்டதாகவும், அவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றதாகவும் தெரிவித்தார். கலெக்டர் அலுவலகத்தில் தாய்- மகள் உள்பட 4 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story