சீர்காழி புதுப்பெண் தற்கொலையில் திடீர் திருப்பம்: கணவரே கழுத்தை நெரித்து கொன்று தூக்கில் தொங்க விட்டது அம்பலம்


சீர்காழி புதுப்பெண் தற்கொலையில் திடீர் திருப்பம்: கணவரே கழுத்தை நெரித்து கொன்று தூக்கில் தொங்க விட்டது அம்பலம்
x
தினத்தந்தி 3 Feb 2020 11:00 PM GMT (Updated: 3 Feb 2020 7:21 PM GMT)

சீர்காழியில், புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கணவரே கழுத்தை நெரித்து கொன்று தூக்கில் தொங்க விட்டது அம்பலமானது. திருமணத்திற்கு பிறகும் தகாத உறவை கைவிடாததால் கொன்றதாக கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சீர்காழி,

நாகை மாவட்டம் சீர்காழி கீழமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நல்லுத்தேவர் மகன் பாலு(வயது 34). இவர், தனியார் டிராக்டர் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், திருத்துறைப்பூண்டி மடப்புரம் ஆற்றங்கரைத்தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகள் நாடியம்மாள்(26) என்பவருக்கும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பின்னர் சீர்காழி கீழமாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்த இருவரும் கடந்த 1½ மாதத்திற்கு முன்பு சீர்காழி தென்பாதி ஆர்.கே.டி. நகரில் ஒத்திக்கு வீடு பிடித்து குடும்பம் நடத்தி வந்தனர். கணவன்-மனைவிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது.

தூக்கில் தொங்கினார்

சம்பவத்தன்று இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதமும், தகராறும் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவத்திற்கு பின்னர் நாடியம்மாள் தூக்கில் பிணமாக தொங்கினார். சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், நாடியம்மாள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதனையடுத்து அவரது உடலை வீட்டிற்கு கொண்டு சென்றனர்.

உதவி கலெக்டர் விசாரணை

இதுகுறித்து நாடியம்மாளின் பெற்றோர், தங்களது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு வந்தனா தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று நாடியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் இறந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மயிலாடுதுறை உதவி கலெக்டர் மகாராணி விசாரணை நடத்தினார். விசாரணையில், நாடியம்மாள் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பது தெரிய வந்தது.

பரபரப்பு வாக்குமூலம்

இந்த நிலையில் கைவிளாஞ்சேரி கிராம நிர்வாக அலுவலர் பிரைசந்திரனிடம் பாலு சரண் அடைந்து தான் தனது மனைவியை கொன்று தூக்கில் தொங்க விட்டதாக கூறினார்.

இதனையடுத்து இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சீர்காழி போலீஸ் நிலையத்திற்கு தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து சீர்காழி போலீசார், மனைவியை கொன்றதாக பாலுவை கைது செய்தனர்.

கைதான பாலு போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியதாவது:-

தகாத உறவு

திருமணத்திற்கு முன்பே என் மனைவிக்கு, திருத்துறைப்பூண்டியை சேர்ந்த வேறு ஒருவருடன் பழக்கம் இருந்து வந்துள்ளது. அந்த பழக்கம் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து வந்தது. இதனை அறிந்த நான் எனது மனைவியை பலமுறை கண்டித்துள்ளேன். ஆனாலும் தொடர்ந்து என் மனைவி செல்போன் மூலம் அந்த நபருடன் பேசிவந்தார்.

நான் எப்போது என் மனைவிக்கு தொடர்பு கொண்டாலும் லைன் பிசியாகவே இருக்கும். இதனால் அடிக்கடி எங்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. என் மனைவி திருவாரூரில் உள்ள மெடிக்கல் சென்டருக்கு நர்ஸ் வேலைக்கு சென்று சேரப்போவதாகவும், என்னையும் திருவாரூருக்கு வரச்சொல்லி என்னிடம் தொடர்ந்து தகராறு செய்தார்.

கழுத்தை நெரித்து கொன்றேன்

சம்பவத்தன்று காலை என்னிடம் சண்டையிட்டு வீட்டில் இருந்த பொருட்களை வீசி தாக்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த நான், நைலான் கயிற்றால் என் மனைவி நாடியம்மாளின் கழுத்தை நெரித்து கொலை செய்தேன். பின்னர் நானே, தூக்கு கயிற்றில் மாட்டி என் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடினேன். என் மனைவியை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டது எனக்கு மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்தியது. இதனால் நான் சரண் அடைந்தேன். இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

Next Story