அண்ணா நினைவுதினத்தையொட்டி விநாயகர் கோவிலில் சமபந்தி விருந்து எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்


அண்ணா நினைவுதினத்தையொட்டி   விநாயகர் கோவிலில் சமபந்தி விருந்து   எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்
x
தினத்தந்தி 4 Feb 2020 4:30 AM IST (Updated: 4 Feb 2020 1:32 AM IST)
t-max-icont-min-icon

அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி கே.கே.நகரில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் நடந்த சமபந்தி விருந்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் 51-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னையில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்து நடந்தது. கே.கே.நகரில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் கோவில் பிரகார மண்டபத்தில் முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர். மற்றும் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது. அவற்றுக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் நடந்த பொதுவிருந்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு உணவருந்தினார். உடன் முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், வளர்மதி உள்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேள தாளம் முழங்க வரவேற்பு

முன்னதாக வடபழனியில் இருந்து கே.கே.நகர் வரை சாலையின் இருபுறங்களிலும் கட்சி தொண்டர்கள் மலர் மாலை, பொன்னாடை சகிதமாக மேள தாளம் முழங்க முதல்-அமைச்சரை வரவேற்றனர். எப்போதும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வடபழனி, நூறடி சாலை மற்றும் கே.கே.நகர் சாலையில் முதல்-அமைச்சரின் வருகையையொட்டி நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

திருவான்மியூர் மருந்தீசுவரர் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். திருவொற்றியூர் வடிவுடையம்மன் சமேத தியாகராஜசுவாமி கோவிலில் நடந்த பொதுவிருந்தில் சபாநாயகர் ப.தனபால் கலந்து கொண்டார்.

பார்த்தசாரதி கோவில்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சாமி கோவிலில் நடந்த பொதுவிருந்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் நடந்த பொதுவிருந்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார். அவருடன் எம்.எல்.ஏ. ஆர்.நடராஜ் கலந்து கொண்டார்.

பாரிமுனை கந்தகோட்டம் முருகன் கோவிலில் நடந்த பொதுவிருந்தில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரும், கோயம்பேடு குறுங்காலீசுவரர் கோவிலில் நடந்த பொதுவிருந்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் கலந்து கொண்டனர்.

அப்போது நிருபர்களிடம் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறும்போது, ‘தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் சிரமம் இல்லாமல் கலந்து கொள்வதற்கு வேண்டிய வசதிகளை செய்து தரவேண்டும் என்று முதல்- அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி தமிழகத்தின் முக்கிய ஊர்களில் இருந்து 250 சிறப்பு பஸ்கள் தஞ்சாவூருக்கு இயக்கப்படுகிறது. தேவைப்பட்டால் அந்தந்த பகுதிகளில் இருந்து கூடுதலாக பஸ்களை இயக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது’ என்றார்.

வடபழனி முருகன்

அதேபோல் மாங்காடு வைகுண்டப்பெருமாள் வகையறா தேவஸ்தானம் கோவிலில் நடந்த பொதுவிருந்தில் அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டார். அவருடன் ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. கே.பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வடபழனி முருகன் கோவிலில் நடந்த பொதுவிருந்தில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் நிவாரணத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சத்யா எம்.எல்.ஏ., கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், நிர்வாக அலுவலர் சித்ராதேவி உள்பட பலர் கலந்து கொண்டார். திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் நடைபெற்ற பொது விருந்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்துகொண்டார். சென்னை காளிகாம்பாள் கோவிலில் நடந்த பொதுவிருந்தில் மின்சார துறை அமைச்சர் பி.தங்கமணி கலந்து கொண்டார்.

இதேபோல் பல்வேறு கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்தில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

Next Story