பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி சாவு: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்


பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி சாவு: குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்
x
தினத்தந்தி 3 Feb 2020 11:00 PM GMT (Updated: 3 Feb 2020 9:28 PM GMT)

வேடசந்தூர் அருகே பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி இறந்த வழக்கில், குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் திண்டுக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்,

வேடசந்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் தம்பதியினருக்கு 10 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் இருந்தனர். சிறுமியின் தாய், வேடசந்தூரில் உள்ள தனியார் நூற்பாலைக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

தந்தை மட்டும் வீட்டில் இருந்தார். நேற்று முன்தினம் விளையாட செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்ற சிறுமி, அருகில் உள்ள தோட்டத்தில் தலையில் காயங்களுடன் பிணமாக கிடந்தாள். இதுகுறித்து கூம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது.

சாலை மறியல்

இதற்கிடையே வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் இருந்த சிறுமியின் பெற்றோரை நேற்று முன்தினம் இரவு போலீசார் விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது, அங்கு தனது மகள் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் டிராக்டரில் விழுந்து அடிபட்டு இறந்து விட்டதாக சிறுமியின் பெற்றோரிடம் போலீசார் மிரட்டி எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது.

அதன்பிறகும் போலீசார் அவர்களை விடுவிக்கவில்லை. இதனால் சிறுமியின் பெற்றோர் போலீஸ் நிலையத்தில் கதறி அழுதனர். இதையடுத்து அந்த சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சிறுமியின் பெற்றோரிடம் போலீசார் எழுதி வாங்கிய தகவல் உறவினர்களுக்கு தெரியவரவே, அது அவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. பின்னர் அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு திண்டுக்கல்-திருச்சி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

பஸ் முன் படுத்து...

அப்போது, சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். மேலும் சிறுமி கீழே விழுந்து இறந்ததாக கூறி பெற்றோரை மிரட்டி எழுதி வாங்கிய முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும் சிறுமியின் பெற்றோரை விடுவித்தால் மட்டுமே மறியலை கைவிடுவதாக கூறினர்.

மறியல் நடந்து கொண்டிருந்தபோது, சிறுமியின் உறவினர் ஒருவர் பஸ் முன்பு படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் சிறுமியின் பெற்றோர், வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் இருந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு நேற்று காலை 10 மணி அளவில் அழைத்து வரப்பட்டனர்.

போலீசார் பேச்சுவார்த்தை

மறியல் குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் நகர போலீஸ் துணை சூப்பிரண்டு மணிமாறன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுமியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதற்கிடையே வேடசந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. பரமசிவம், திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்தார். பின்னர் சிறுமியின் உறவினர்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் கூறும்போது, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆர்.டி.ஓ. முன்னிலையில் தேனி மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் அடங்கிய குழுவினரால் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும். இந்த பிரேத பரிசோதனை வீடியோ கேமராவில் பதிவு செய்யப்படும் என்றார்.

நேற்று மாலை 4 மணியளவில் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்-பழனி சாலையில் அக்ரஹாரம் பகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ.பாலபாரதி தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று மாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி இறந்த வழக்கில் உண்மை குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தியும், சிறுமியின் பெற்றோரை போலீசார் மூலம் மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். பின்னர் பாலபாரதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளியை தப்பவிட்டு விட்டு 2 சிறுவர்கள் மீது பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறுமியின் பெற்றோரிடம் தங்களுடைய மகள் டிராக்டரில் விழுந்து தான் இறந்து விட்டார் என்று எழுதி தர வலியுறுத்தி போலீசார் மிரட்டினர். கொலை குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மாநில அளவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும். இந்த வழக்கில் நீதிமன்றம் தலையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த மறியலில் ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஈடுபட்டனர்.


Next Story