படப்பை அருகே வீட்டுக்குள் நாட்டு வெடிகுண்டு வீச்சு; வாலிபர் படுகாயம்


படப்பை அருகே   வீட்டுக்குள் நாட்டு வெடிகுண்டு வீச்சு; வாலிபர் படுகாயம்
x
தினத்தந்தி 4 Feb 2020 3:44 AM IST (Updated: 4 Feb 2020 3:44 AM IST)
t-max-icont-min-icon

படப்பை அருகே வீட்டுக்குள் நாட்டு வெகுண்டு வீசிவிட்டு மர்மநபர்கள் தப்பி ஓடினர். குண்டு வெடித்து சிதறியதில் வாலிபர் படுகாயமடைந்தார்.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த எருமையூர் பகுதியில் உள்ள பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பாரத் (வயது 21). இவர் நேற்றுமுன்தினம் நள்ளிரவு அவரது வீட்டில் இருந்தபோது, திடீரென அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று வீட்டின் கதவை தட்டினர்.

கதவை அவர் திறக்காததால், வெடிகுண்டு வீசி கதவை உடைத்துள்ளனர். இதில், குண்டு வெடித்து சிதறியதில், வீடு முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதையடுத்து அங்கிருந்து மர்மநபர்கள் 6 பேரும் தப்பி சென்று விட்டனர்.

இந்த வெடிகுண்டு தாக்குதலில் முகம் மற்றும் மார்பில் தீக்காயமடைந்த பாரத் வீட்டின் அறையில் மயங்கி கிடந்தார். உடனே இது குறித்து அக்கம் பக்கத்தினர் சோமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்த பாரத்தை மீட்டு, சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், காயமடைந்த பாரத் மீது ஒரு சில வழக்குகள் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

எருமையூர் அருகே உள்ள குன்றத்தூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பழந்தண்டலம் பகுதியில் நேற்றுமுன்தினம் வெடிகுண்டு வீசி வாலிபர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வெடிகுண்டு சம்பவம் நேற்று நடந்துள்ளதாலும், இந்த இரு சம்பவங்களும் அருகருகே உள்ள பகுதியில் நடந்திருப்பதாலும் 2 சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் இது தொடர்பாக இரண்டு நிலைய போலீசாரும் இணைந்து தனிப்படை அமைத்து வெடிகுண்டு வீச்சுக்கு காரணமான தப்பி ஓடிய மர்ம நபர்களை பல்வேறு கோணத்தில் தீவிரமாக விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.

Next Story