மின் கம்பியை பிடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை: மதுரையில் 2-வது நாளாக போராட்டம்


மின் கம்பியை பிடித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை: மதுரையில் 2-வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 4 Feb 2020 4:30 AM IST (Updated: 4 Feb 2020 3:55 AM IST)
t-max-icont-min-icon

போலீசார் திட்டியதால் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் 2-வது நாளாக நேற்று போராட்டம் நடைபெற்றது. மேலும், அவருடைய மனைவி உரிய இழப்பீடு வழங்க கோரி கலெக்டரிடம் மனு அளித்தார்.

மதுரை,

மதுரை ஜெய்ஹிந்த்புரம் சோலையழகுபுரம் பகுதியை சேர்ந்தவர் ஹரிச்சந்திரன்(வயது 45). ஆட்டோ டிரைவரான இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆட்டோவில் அவனியாபுரத்திற்கு சென்றிருந்தார். அப்போது போலீசார் அவரை வழிமறித்து ஆட்டோவிற்கான ஆவணங்களை சோதனை செய்துள்ளனர். அப்போது, போலீசார் அவரை தகாத வார்த்தையால் திட்டியதாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த ஹரிச்சந்திரன் அந்த பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் ஏறி மின்கம்பியை பிடித்து தற்கொலைக்கு முயன்றார். படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த அவர் நேற்றுமுன்தினம் பரிதாபமாக இறந்துபோனார்.

இதனை தொடர்ந்து அவரது உடலை வாங்க மறுத்து அந்த பகுதியில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் மற்றும் அவரது உறவினர்கள் பெரிய ஆஸ்பத்திரி முன்புள்ள பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் 2-வது நாளாக உடலை வாங்க மறுத்து ஆட்டோ டிரைவர்கள் மற்றும் ஹரிச்சந்திரனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்காக அவர்கள், கலெக்டர் அலுவலக வளாகத்தின் முன்புள்ள திருவள்ளுவர் சிலை முன்பு கூடினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர். பின்னர் ஹரிச்சந்திரனின் மனைவி சந்திரஜோதி கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனுவை அளித்தார். அந்த மனுவில், கணவரை இழந்து தவிக்கும் எங்கள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், மேலும் என் மகனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும், கணவரின் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். மனுவை பெற்று கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், போராட்டத்தை கைவிடுமாறும் அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பின்னர், நேற்று மதியம் ஹரிச்சந்திரனின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Next Story