சென்னை விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் ரூ.44 லட்சத்து 71 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சார்ஜாவில் இருந்து திருவனந்தபுரம் வழியாக சென்னைக்கு விமானம் வந்தது. அதில் திருவனந்தபுரத்தில் இருந்து உள்நாட்டு பயணியாக வந்த கேரள மாநிலம் கோழிக்கோட்டைச்சேர்ந்த ஸ்ரீஜீத்(வயது 23), அகமது சலீக்(27) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்தனர்.
‘ஷூ’வுக்குள் மறைத்து கடத்தல்
அதிகாரிகளிடம் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்களின் உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லை. ஆனால் 2 பேரும் காலில் அணிந்து இருந்த ‘ஷூ’சற்று வித்தியாசமாக இருந்தது.
இதனால் அவர்களிடம் இருந்து ‘ஷூவை’ கழற்றி சோதனை செய்தனர். அதில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். 2 பேரிடம் இருந்தும் ரூ.28 லட்சம் மதிப்புள்ள 663 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சிங்கப்பூர் விமானம்
அதேபோல் சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த மலேசியாவைச்சேர்ந்த ராஜா சைஜா நாகராஜன் (37) என்ற பெண்ணை நிறுத்தி விசாரித்தனர். அவரது உடைமைகளை சோதனை செய்தபோது, அதில் மறைத்து வைத்து இருந்த ரூ.16 லட்சத்து 71 ஆயிரம் மதிப்புள்ள 396 கிராம் தங்க சங்கிலிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.
சென்னை விமான நிலையத்தில் பெண் உள்பட 3 பேரிடம் இருந்து ரூ.44 லட்சத்து 71 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 59 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இவற்றை யாருக்காக கடத்தி வந்தனர்? என பிடிபட்ட 3 பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story