ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 28 பவுன் நகை திருட்டு போலீசார் விசாரணை


ஓய்வு பெற்ற அரசு ஊழியர்   வீட்டின் பூட்டை உடைத்து 28 பவுன் நகை திருட்டு   போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 4 Feb 2020 4:05 AM IST (Updated: 4 Feb 2020 4:05 AM IST)
t-max-icont-min-icon

மறைமலை நகர் அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 28 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிசென்று விட்டனர்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே உள்ள பேரமனூர் விவேகானந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன் (வயது 60). இவர் மத்திய அரசின் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் தனது குடும்பத்துடன் சொந்த ஊரான கடலூருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன் வாசல் இரும்பு கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து கோபாலகிருஷ்ணன் பதறி அடித்து கொண்டு வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 28 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

20 பவுன் நகைகள்

அதே போல் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் காமகோடி நகர் பகுதியை சேர்ந்தவர் மணிமேகலை (24). இவர் கடந்த 31-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது சொந்த ஊருக்கு சென்றிருந்தார்.

அதன் பின்னர், நேற்று காலை வீடு திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 20 பவுன் தங்க நகைகள் திருடுப்போனது தெரியவந்தது. இதுகுறித்து மணிமேகலை கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story