வாலிபர் கொலையில் 10 மாதங்களுக்கு பிறகு துப்பு துலங்கியது கிணற்றில் எலும்புகளாக மீட்பு


வாலிபர் கொலையில் 10 மாதங்களுக்கு பிறகு துப்பு துலங்கியது   கிணற்றில் எலும்புகளாக மீட்பு
x
தினத்தந்தி 4 Feb 2020 4:13 AM IST (Updated: 4 Feb 2020 4:13 AM IST)
t-max-icont-min-icon

சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் வாலிபர் மாயமான வழக்கில் 10 மாதங்களுக்கு பிறகு அவர் கொலை செய்யப்பட்டு, உடல் கிணற்றில் வீசப்பட்டது தெரிந்தது. கிணற்றில் இருந்து எலும்புகளை மீட்ட போலீசார், இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

தாம்பரம்,

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், கரிகாலன் நகரைச்சேர்ந்தவர் லோகேஷ்(வயது 21). கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு அந்த பகுதியில் உள்ள கஞ்சா விற்பனை கும்பலுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் லோகேசை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், தங்கள் மகனை காணவில்லை என சங்கர் நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான லோகேசை தேடிவந்தனர்.

கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அனகாபுத்தூரைச் சேர்ந்த பிரவீன்(20), நித்தீஷ்(21) ஆகியோர் லோகேசை தாங்கள்தான் கொன்று, அவரது உடலை அனகாபுத்தூரில் அடையாறு ஆற்றை ஒட்டியுள்ள ராணுவத்துக்கு சொந்தமான பாழடைந்த கிணற்றில் வீசியதாக கஞ்சா போதையில் உளறினர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் பிரவீன், நித்தீஷ் இருவரையும் கைது செய்து விசாரித்தனர். அதில், அனகாபுத்தூரைச் சேர்ந்த பாட்சா, அவருடைய தம்பி சிவா, ரவி என்ற டிக்கா ரவி ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் முன்விரோதம் காரணமாக மற்றொரு கஞ்சா வியாபாரியை வெட்டினர். அதன்பிறகு கஞ்சா வியாபாரிகள் இருதரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டு வந்தது.

இதில் தங்களுக்கு எதிராக மற்றொரு கஞ்சா வியாபாரியுடன் சேர்ந்து செயல்பட்டதாக கூறி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் லோகேசை, கஞ்சா வியாபாரியான பாட்சா, தனது கூட்டாளிகளான நித்தீஷ், பிரவீன் உள்பட 5 பேருடன் சேர்ந்து அனகாபுத்தூர் பகுதியில் இருந்து அழைத்துச்சென்று ராணுவ கிணறு அருகே வெட்டிக்கொலை செய்துவிட்டு, அவரது உடலை கிணற்றில் வீசியது விசாரணையில் தெரிந்தது.

எலும்பு கூடாக மீட்பு

இதையடுத்து கைதான இருவரும், லோகேசை கொன்று வீசிய கிணற்றை நேற்று காலை போலீசாருக்கு அடையாளம் காட்டினர். கிணற்றில் இருந்து லோகேசின் உடலை மீட்கும் பணியில் போலீசாரும், வருவாய்த்துறையினரும் ஈடுபட்டனர்.

கிணற்றை சுற்றி இருந்த புதரை அகற்றி, கிணற்றில் இருந்த தண்ணீரும் வெளியேற்றப்பட்டு லோகேசின் உடலை தேடினர். பல மணிநேரம் தேடுதலுக்கு பிறகு கிணற்றில் இருந்து லோகேசின் உடலை எலும்புகளாக மீட்டனர். கொலை செய்யப்பட்டு சுமார் 10 மாதங்களாக தண்ணீரில் கிடந்ததால் உடல் அழுகி, எலும்புகளாக மாறி இருந்தது.

எனினும் அது லோகேஷ் உடல் தானா? என்பதை உறுதி செய்வதற்காக மருத்துவ குழுவினர் மூலம் தடயவியல் துறைக்கு அனுப்பி வைத்தனர்.

3 பேருக்கு வலைவீச்சு

இந்த கொலையில் பிரவீன், நித்தீஷ் கைதான நிலையில், இதில் தொடர்புடைய கஞ்சா வியாபாரி பாட்சா, வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை சங்கர்நகர் போலீசார் தேடி வருகின்றனர். கஞ்சா வியாபாரிகள் மோதலில் வாலிபரை கொன்று உடலை கிணற்றில் வீசிய சம்பவம் அனகாபுத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story