ஜல்காவில் பயங்கர விபத்து கார் மீது லாரி மோதி 12 பேர் பலி திருமணத்துக்கு சென்று திரும்பிய போது சோகம்
ஜல்காவில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தவர்களின் கார் மீது லாரி மோதிய விபத்தில் 12 பேர் பலியானார்கள்.
மும்பை,
ஜல்காவ் மாவட்டம் முக்தை தாலுகா சிஞ்சோல் கிராமத்தை சேர்ந்தவர் பாலு நாராயண் சவுத்ரி. இவர் தனது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் சோப்ரா கிராமத்தில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார். திருமண நிகழ்ச்சி முடிந்து அவர்கள் நேற்று முன்தினம் இரவு காரில் சிஞ்சோலுக்கு திரும்பி கொண்டு இருந்தனர்.
காரில் பாலு நாராயண் சவுத்ரியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவரது பக்கத்து கிராமமான மெகுலை சேர்ந்த உறவினர்கள் என 17 பேர் இருந்தனர்.
அவர்கள் பயணம் செய்த கார் யவல் தாலுகாவில் உள்ள ஹிங்கோலா கிராமம் அருகே இரவு 11 மணி அளவில் வந்தபோது, எதிரே வேகமாக வந்த லாரி ஒன்று பயங்கரமாக மோதியது.
12 பேர் பலி
இந்த விபத்தில் பாலு நாராயண் சவுத்ரி, அவரது மனைவி உள்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிாிழந்தனர். மற்ற 5 பேர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்தனர். லாரி மோதியதில் கார் முற்றிலும் உருக்குலைந்து போனது. இந்த கோர விபத்து பற்றி தகவல் அறிந்ததும் பைசாபூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஜல்காவில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர்.
பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமண நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியர்கள் விபத்தில் பலியான சம்பவத்தால் 2 கிராமங்களும் சோகத்தில் மூழ்கின.
Related Tags :
Next Story