மும்பையில் மின்சார ரெயில் சேவையின் 95-ம் ஆண்டு நிறைவு விழா


மும்பையில்   மின்சார ரெயில் சேவையின் 95-ம் ஆண்டு நிறைவு விழா
x
தினத்தந்தி 4 Feb 2020 5:24 AM IST (Updated: 4 Feb 2020 5:24 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் மின்சார ரெயில் இயக்கத்தின் 95-ம் ஆண்டு நிறைவு விழா நேற்று கொண்டாடப்பட்டது.

மும்பை,

நாட்டின் நிதிநகரமான மும்பையில் கடந்த 1853-ம் ஆண்டு அப்போதைய போரிபந்தராக இருந்த சி.எஸ்.எம்.டி.- தானே பயணிகள் ரெயில் சேவை தொடங்கப்பட்டது. இருப்பினும் 1925-ம் ஆண்டு தான் முதன் முதலாக மின்சார ரெயில் சேவை தொடங்கப்பட்டது. அப்போது சி.எஸ்.எம்.டி. விக்டோரியா டெர்மினசாக இருந்தது.

விக்டோரியா டெர்மினஸ்- குர்லா இடையில் தான் 4 பெட்டிகளை கொண்ட மின்சார ரெயில் சேவையை அப்போதைய பாம்பே கவர்னர் சர் லெஸ்லி வில்சன் தொடங்கி வைத்தார்.

95-ம் ஆண்டு நிறைவு விழா

படிப்படியாக 9, 12 மற்றும் 15 பெட்டிகள் என மின்சார ரெயில் சேவை வளர்ச்சிக் கண்டது. தற்போது மும்பையில் மத்திய மற்றும் மேற்கு ரெயில்வே வழித்தடங்களில் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏ.சி. மின்சார ரெயில் சேவையும் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த ரெயில் சேவைகளை தற்போது சுமார் 80 லட்சம் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், மும்பையில் மின்சார ரெயில் சேவை தொடங்கி நேற்றுடன் 95 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதையொட்டி சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் சேவையின் 95 ஆண்டு விழா நடந்தது.

அதை நினைவு கூரும்வகையில் நேற்று மும்பை சி.எஸ்.எம்.டி.யில் இருந்த அலங்கரிக்கப்பட்ட பழைய மின்சார ரெயில் இயக்கப்பட்டது.

Next Story