பதவியை தக்க வைத்து கொள்ள தேர்தலில் போட்டியிடுவீர்களா? உத்தவ் தாக்கரே பதில்
பதவியை தக்க வைத்து கொள்ள தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதிலளித்தார்.
மும்பை,
சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் நிர்வாக ஆசிரியர் சஞ்சய் ராவத் எம்.பி. அக்கட்சியின் தலைவரும், முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரேயை பேட்டி கண்டார்.
அப்போது உத்தவ் தாக்கரே பதிலளித்து கூறியதாவது:-
மாநில நலன் முக்கியம்
நான் தற்செயல் முதல்-மந்திரியாக இருக்கலாம். ஒருபோதும் முதல்-மந்திரி ஆக வேண்டும் என கனவு கண்டது இல்லை.
சிவசேனாவை சேர்ந்தவரை மராட்டியத்தின் முதல்-மந்திரி ஆக்குவேன் என எனது தந்தைக்கு (பால்தாக்கரே) வாக்குறுதி அளித்து இருந்தேன். ஆனால் பாரதீய ஜனதாவுடன் இருந்தால் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்பதை உணர்ந்து அதன் காரணமாக வேறுவழியின்றி இவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்றேன். நான் முதல்-மந்திரி ஆகி இருப்பது எனது தந்தைக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான முதல் படி ஆகும்.
நான் அரசியலுக்கு புதிதானவன் அல்ல. எனது தந்தையிடம் இருந்து அரசியலை சிறுவயதில் இருந்தே பார்த்து வந்து இருக்கிறேன். இதில் எதிர்பாராமல் வந்தது அதிகார நாற்காலி தான். கொள்கையில் முரண்பட்ட கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்பது என்பது ஏற்கனவே நடந்து உள்ளது. எந்தவொரு சித்தாந்தத்தையும் விட நாடு மற்றும் மாநிலத்தின் நலன் முக்கியமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தலில் போட்டியிடுவீர்களா?
கொள்கையில் முரண்பட்ட கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைத்து முதல்-மந்திரி பதவியை ஏற்றுக் கொண்டதால் நீங்கள் மாநில மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறீர்களா? என கேட்டதற்கு பதிலளித்த உத்தவ் தாக்கரே, “அரசியல் அதிர்ச்சிகள் பல வகையானவை. கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். வாக்குறுதியை நிறைவேற்றாத வருத்தமும், கோபமும் இருக்கிறது. தற்போது பாரதீய ஜனதா அதிர்ச்சியில் இருந்து மீண்டதா என எனக்கு தெரியவில்லை.
நான் பெரிதாக நிலவை கொண்டு வந்து தாருங்கள், நட்சத்திரங்களை கொண்டு வந்து தாருங்கள் என்றா கேட்டேன். தேர்தலுக்கு முன் பேசி முடிவு செய்யப்பட்டதை தான் நினைவூட்டினேன். நான் என்ன செய்தேனோ அதை உண்மையாகவே செய்தேன். நான் எனது இடத்தில் இருந்து ஒருபோதும் ஓடமாட்டேன்” என்று பதில் கூறினார்.
சட்டசபை அல்லது மேல்-சபை உறுப்பினராக இல்லாமல் முதல்-மந்திரியாகி இருப்பதால் பதவியை தக்க வைத்து கொள்ள தேர்தலில் போட்டியிடுவீர்களா என கேட்டதற்கு, இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் அதுபற்றி முடிவு எடுப்பேன் என்றார்.
Related Tags :
Next Story