பொங்கலூர் அருகே பயங்கரம்: பெண் வெட்டிக்கொலை - தொழிலாளி வெறிச்செயல்


பொங்கலூர் அருகே பயங்கரம்: பெண் வெட்டிக்கொலை - தொழிலாளி வெறிச்செயல்
x
தினத்தந்தி 4 Feb 2020 4:45 AM IST (Updated: 4 Feb 2020 7:00 AM IST)
t-max-icont-min-icon

பொங்கலூர் அருகே அரிவாளால் வெட்டி பெண் படுகொலை செய்யப்பட்டார். வெறிச்செயலில் ஈடுபட்ட தொழிலாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.

பொங்கலூர்,

திருப்பூர்மாவட்டம், பொங்கலூர் அருகே உள்ள தொங்குட்டிபாளையத்தை சேர்ந்தவர் காளிமுத்து. இவருடைய மனைவி வேலுமணி(வயது 45). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கழிவு பஞ்சு குடோனில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர்களுக்கு புவனா(19) என்ற மகளும், சந்திரபோஸ்(11) என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காளிமுத்து இறந்து விட்டார். இவர்களது மகள் புவனாவிற்கு திருமணம் ஆகிவிட்டது. சந்திரபோஸ் பெருந்தொழுவு அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.

தினமும் காலையில் வேலுமணி வேலைக்கு செல்லும் முன், தனது மகனைஅந்த வழியாக வரும் அரசு பஸ்சில் ஏற்றி விடுவது வழக்கம். அதன்படி நேற்று காலை தனது மகன் சந்திரபோசுடன் வேலுமணி தொங்குட்டிப்பாளையம் பஸ் நிறுத்தத்திற்கு வந்தார். அங்கு காலையில் அரசு பஸ் வந்ததும் மகனை அதில் ஏற்றி விட்டார். பின்னர் மகனுக்கு உற்சாகத்துடன் டாடா காண்பித்து விட்டு, வீட்டுக்கு செல்வதற்காக அங்கிருந்து புறப்பட்டார்.

காலை 8.45 மணியளவில் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது, அந்த வழியாக வந்த அதே ஊரை சேர்ந்த தொழிலாளியான நாச்சிமுத்து(60) என்பவர் வேலுமணியை வழிமறித்தார். பின்னர் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே ஆத்திரத்தில் இருந்த நாச்சிமுத்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வேலுமணியை வெட்டினார். இதில் அவரதுகழுத்து, வலது கையில் வெட்டு விழுந்தது. இதனால் அவர் அலறியபடியே ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

அதற்குள் அரிவாளுடன் நின்றிருந்த நாச்சிமுத்து அங்கிருந்து தப்பிஓடி விட்டார். அரிவாளால் வெட்டப்பட்ட வேலுமணி சிறிது நேரத்திலேயே அதே இடத்தில் துடி்துடித்து பரிதாபமாக இறந்தார்.

பின்னர் அக்கம், பக்கத்தினர் இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

தொடர்ந்து கொலை செய்யப்பட்ட வேலுமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய நாச்சிமுத்துவை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். நாச்சிமுத்து பிடிபட்டால் தான் கொலைக்கான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story