கூடலூரில், வளர்ப்பு யானைகளின் உடல் எடை கணக்கீடு


கூடலூரில், வளர்ப்பு யானைகளின் உடல் எடை கணக்கீடு
x
தினத்தந்தி 4 Feb 2020 3:30 AM IST (Updated: 4 Feb 2020 8:03 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் வளர்ப்பு யானைகளின் உடல் எடை கணக்கிடப்பட்டது.

கூடலூர்,

வனப்பகுதியில் தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானைகளை மீட்டு முதுமலைக்கு கொண்டு வந்து தெப்பக்காடு முகாமில் வைத்து வனத்துறையினர் பராமரித்து வருகின்றனர். மேலும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை பிடித்து கும்கியாக மாற்றி வளர்க்கப்படுகிறது. இவ்வாறு முதுமலை புலிகள் காப்பகத்தில் 27 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இதற்காக கால்நடை மருத்துவ பிரிவும் செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து பாகன்கள் குழுவினர் வளர்ப்பு யானைகளை தினமும் குளிப்பாட்டி ஊட்டச்சத்து உணவுகளை வழங்கி வனப்பகுதிக்கு அழைத்து செல்கின்றனர். இதை காண சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை தருகின்றனர்.

வளர்ப்பு யானைகளின் உடல் நலனை 3 மாதங்களுக்கு ஒருமுறை கண்காணித்து வருகின்றனர். இதற்காக கூடலூர் தொரப்பள்ளியில் உள்ள மையத்துக்கு வளர்ப்பு யானைகளை அழைத்து வந்து, அதன் உடல் எடையை வனத்துறையினர் கணக்கிடுகின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வளர்ப்பு யானைகளின் உடல் எடையை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது சராசரியாக 150 கிலோ வரை யானைகளின் உடல் எடை அதிகரித்து இருந்தது தெரியவந்தது.

இந்த நிலையில் தமிழக கோவில்களில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி 48 நாட்கள் நடைபெற்றது. இதில் தமிழகம், புதுச்சேரி பகுதியில் இருந்து மொத்தம் 28 யானைகள் கொண்டு வரப்பட்டு பயிற்சி, சரிவிகித உணவு, ஆயுர்வேத மருந்துகள், ஊட்டச்சத்து உணவுகள் அளிக்கப்பட்டது. கடந்த 31-ந் தேதி நலவாழ்வு முகாம் நிறைவு பெற்றது. இதில் அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருகிற 6-ந் தேதி முதல் 48 நாட்கள் வனத்துறை வளர்ப்பு யானைகளுக்கு நலவாழ்வு முகாம் நடத்தப்படும் என அறிவித்தார்.

இதையொட்டி முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள 27 வளர்ப்பு யானைகளின் உடல் எடையை அறிய வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக முதுமலையில் இருந்து வளர்ப்பு யானைகளை கூடலூர் தொரப்பள்ளிக்கு வனத்துறையினர் அழைத்து வந்தனர். தொடர்ந்து எடை மையத்தில் வளர்ப்பு யானைகளின் உடல் எடை கணக்கிடப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, முதுமலையில் நலவாழ்வு முகாம் நடைபெற உள்ளதால் வளர்ப்பு யானைகளின் உடல் எடை கணக்கீடு செய்யப்படுகிறது. இதில் எடை குறைந்த யானைகளுக்கு பிரத்யேக சிகிச்சை, ஊட்டச்சத்து உணவுகள் அளிக்கப்படும். முகாம் நிறைவு பிறகு மீண்டும் யானைகளின் எடை கணக்கெடுக்கப்படும் என்றனர்.

Next Story