பாளையங்கோட்டையில், வக்கீல்கள் திடீர் சாலை மறியல் - கோர்ட்டுக்கு வந்த போலீசாரை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
பாளையங்கோட்டையில் வக்கீல்கள் நேற்று திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், கோர்ட்டுக்கு வந்த போலீசாரை அவர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை,
பாளையங்கோட்டையை சேர்ந்தவர் வக்கீல் பூபதி. இவர் கடந்த 1-ந் தேதி பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அங்கு வாகன சோதனையில் ஈடுபட்ட பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளியம்மாள், ஏட்டு காளியப்பன் ஆகியோர் அவரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது வக்கீல் பூபதிக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் தன்னை போலீசார் தாக்கியதாக கூறி அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தார்.
பூபதி கொடுத்த புகாரின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் காளியம்மாள், ஏட்டு காளியப்பன் ஆகியோர் மீது பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் வக்கீல் பூபதியை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை கோர்ட்டில் வக்கீல்கள் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். கோர்ட்டு முன்பு உள்ள திருச்செந்தூர் சாலையில் வக்கீல்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது வக்கீல்கள் போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி அறிந்த நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள், மறியலில் ஈடுபட்ட வக்கீல்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் வக்கீல்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
அப்போது போலீசார் வழக்கு விசாரணைக்காக கைதிகளை ஆஜர்படுத்த கோர்ட்டுக்கு சென்றனர். அவர்களை வக்கீல்கள் தடுத்து நிறுத்திார். கோர்ட்டுக்கு செல்லக்கூடாது என போலீசாரை வக்கீல்கள் திருப்பி அனுப்பினர். இதனால் போலீசார் கோர்ட்டுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.
பெரும்பாலான வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால், விசாரணைக்கு வந்த வழக்குகள் வேறு தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டன. நெல்லை வக்கீல் சங்க நிர்வாகிகள், போலீஸ் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்பின்னர் வக்கீல்கள் கைதிகளை மட்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த அனுமதித்தனர். நெல்லை மாநகர போலீசாரை கோர்ட்டு வளாகத்துக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக கோர்ட்டில் நேற்று பரபரப்பு நிலவியது.
Related Tags :
Next Story