இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்


இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 4 Feb 2020 12:00 PM IST (Updated: 4 Feb 2020 11:46 AM IST)
t-max-icont-min-icon

இலங்கை கடற்படையை கண்டித்து ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். மேலும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் மற்றும் கோடியக்கரையில் இருந்து கடந்த மாதம் 27 மற்றும் 30-ந் தேதிகளில் விசைப்படகு, நாட்டுப்படகுகளில் மீன் பிடிக்க சென்ற ராமேசுவரம் மற்றும் பாம்பனை சேர்ந்த 19 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அந்த மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யவும், சேதமாகி கடலில் மூழ்கிப்போன படகுகளுக்கு நிவாரணம் வழங்கவும், இலங்கையில் விடுதலை செய்யப்பட்ட படகுகளை மீட்டு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ராமேசுவரம் பஸ்நிலையம் எதிரே நேற்று அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மீனவர் சங்க தலைவர் போஸ் தலைமை தாங்கினார். மீனவர் சங்கங்களின் நிர்வாகிகள் சேசுராஜா, எமரிட், சகாயம், தட்சிணாமூர்த்தி, சந்தியாகு, கருவாடு வியாபாரி சங்க தலைவர் தர்மர், செயலாளர் பிச்சை உள்பட ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேசுவரத்தில் நேற்று விசைப்படகு மீனவர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தமாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுக கடலில் அணிவகுத்து நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

இதுகுறித்து மீனவர் சங்க நிர்வாகி சேசுராஜா கூறியதாவது:-

கடந்த 4 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 187 படகுகளும் விடுதலை செய்யப்பட்டுவிட்டன. அதில் இது வரையிலும் நல்ல நிலையில் இருந்த 37 படகுகள் மட்டும் தான் தமிழகம் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான படகுகள் பலத்த காற்று மற்றும் கடல்கொந்தளிப்பால் ஒன்றோடொன்று மோதி முழுமையாக சேதமாகி கடலில் மூழ்கிப் போய் விட்டன. இதனால் படகின் உரிமையாளர்கள் குடும்பத்துடன் தவித்து வருகின்றனர்.

சேதம் அடைந்த படகுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும், கடந்த 1 வருடத்தில் பிடிபட்ட தமிழகத்தை சேர்ந்த 40 படகுகளும் சேதமடைந்து கடலில் மூழ்கும் முன்பு இலங்கை அரசோடு பேசி அந்த 40 படகுகளையும் விடுதலை செய்து தமிழகம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் படகுகளை மீட்டு கொண்டு வர மீட்புக்குழு இலங்கை சென்று வரவும் உரிய அனுமதி பெற்றுத் தர வேண்டும். பாரம்பரிய கடல் பகுதியில் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படை பிரச்சினை இல்லாமல் மீன்பிடிக்க மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story