இந்தியாவில் ஆண்டுக்கு 7½ லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள்; அரசு மருத்துவக்கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரி தகவல்


இந்தியாவில் ஆண்டுக்கு 7½ லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள்; அரசு மருத்துவக்கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரி தகவல்
x
தினத்தந்தி 4 Feb 2020 10:30 PM GMT (Updated: 4 Feb 2020 1:26 PM GMT)

உலக புற்றுநோய் தினத்தையொட்டி நடந்த விழிப்புணர்வு பயிலரங்கில் இந்தியாவில் ஆண்டுக்கு 7½ லட்சம் பேர் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் சுகந்தி ராஜகுமாரி கூறினார்.

நாகர்கோவில், 

உலக புற்றுநோய் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 4–ந் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான உலக புற்றுநோய் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி நிர்வாக அலுவலக கட்டிடம் முன் இருந்து தொடங்கிய பேரணி புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் அருகே நிறைவடைந்தது.

பேரணியை டீன் சுகந்தி ராஜகுமாரி தொடங்கி வைத்தார். இதில் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ மாணவ– மாணவிகள், செவிலிய மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து புறநோயாளிகள் பிரிவில் உள்ள கூட்ட அரங்கில் பொதுமக்களுக்கு புற்றுநோய் பரிசோதனை முகாம் நடந்தது. இதில் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து ஆலோசனைகளும், அறிவுரைகளும் வழங்கப்பட்டன.

மேலும் மனநோய் பிரிவில் உள்ள கூட்ட அரங்கில் புற்றுநோய் விழிப்புணர்வு பயிலரங்கம் நடந்தது. இதற்கு டீன் சுகந்தி ராஜகுமாரி தலைமை தாங்கினார். ஸ்ரீராம் புற்றுநோய் அறக்கட்டளையை சேர்ந்த செந்தில்குமார் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து பேசினார். ஆஸ்பத்திரி சூப்பிரண்டு அருள்பிரகாஷ், உறைவிட மருத்துவ அதிகாரி ஆறுமுகவேலன், புற்றுநோய் அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் பிரனீத், அறுவை சிகிச்சைத்துறை பேராசிரியர் செந்தில்குமார், மகளிர் சிகிச்சைப்பிரிவு டாக்டர் ஆறுமுக செல்வி, டாக்டர்கள் செல்வின், பகவத் உள்பட பல டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலிய மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டீன் சுகந்தி ராஜகுமாரி பேசும்போது கூறியதாவது:–

இந்திய அளவில் ஆண்டுக்கு சுமார் 7½ லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் முழுமையாக குணப்படுத்தலாம். பொதுமக்களுக்கு இன்னமும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது. புற்றுநோய்க்குரிய சில அறிகுறிகள் தென்படும்போது உடனடியாக பரிசோதனைகளை மேற்கொண்டால் ஆரம்ப நிலையிலேயே புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்த முடியும். இதற்கு உரிய சிகிச்சைகள் எடுக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன.

அறிகுறிகளை பொறுத்தவரையில் முதலில் இருமல் 2 வாரத்துக்கு மேல் இருத்தல், உடல் எடை குறைதல், பசியின்மை, மலச்சிக்கல் ஏற்படுதல், ரத்தக்கசிவு, ஆறாத புண்கள், தீராத வயிற்றுவலி, கட்டிகள், பெண்களுக்கு மார்பகங்களில் கட்டிகள் மற்றும் வீக்கங்கள் தென்படுதல், உதிரப்போக்கு அடிக்கடி ஏற்படுதல், தொண்டை புற்றுநோய் அறிகுறியாக முதலில் குரல் மாற்றம் ஏற்படுதல், உணவை உட்கொள்ள முடியாத நிலை ஏற்படுதல், மச்சத்தில் இருந்து ரத்தக்கசிவு ஏற்படுதல், மச்சங்களில் ஏற்படும் மாறுதல்கள் ஆகிய அறிகுறிகள் இருந்தால் டாக்டர்களை அணுகி உரிய பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இதற்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் புற்றுநோய் சிகிச்சைத்துறை தனியாக செயல்படுகிறது. சிறப்பு மருத்துவர்களும் உள்ளனர். அங்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு, உடனடியாக சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். பெண்களுக்கு கர்ப்பப்பை புண்கள் இருந்தால் அதற்குரிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளித்து, புற்றுநோய் வராமல் தடுக்கப்படும்.

 புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து அறுவை சிகிச்சை, மருந்துகள் மூலம் வழங்கப்படும் ஹீமோதெரபி சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சைகள் மூலம் முற்றிலுமாக குணப்படுத்த முடியும்.

வருகிற 8–ந் தேதி காலை 10 மணிக்கு மருத்துவக்குழுவினர் முதன்முதலாக கடியப்பட்டணம் பகுதிக்கு சென்று புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ள இருக்கிறார்கள். இதில் புற்றுநோய் அறிகுறிகள் இருந்தால் அவர்களை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக சேர்த்து சிகிச்சை அளிக்கப்படும்.

குமரி மாவட்டத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகம் இருப்பதற்கான காரணங்களை கண்டறிய கலெக்டரும், சுகாதாரதுறையினரும் உத்தரவிட்டுள்ளனர்.

இவ்வாறு டீன் சுகந்தி ராஜகுமாரி பேசினார்.

Next Story