குரூப்-4 முறைகேடு வழக்கில் தேடப்பட்ட போலீஸ்காரர் சித்தாண்டி அதிரடி கைது மனைவியை பிடிக்கவும் சி.பி.சி.ஐ.டி. தீவிரம்


குரூப்-4 முறைகேடு வழக்கில் தேடப்பட்ட போலீஸ்காரர் சித்தாண்டி அதிரடி கைது மனைவியை பிடிக்கவும் சி.பி.சி.ஐ.டி. தீவிரம்
x
தினத்தந்தி 4 Feb 2020 11:15 PM GMT (Updated: 4 Feb 2020 5:13 PM GMT)

குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கில் தேடப்பட்ட போலீஸ்காரர் சித்தாண்டி, சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருடைய மனைவியை பிடிக்கவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சிவகங்கை,

தமிழக அரசில் காலியாக உள்ள குரூப்-4 பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சில மாதங்களுக்கு முன்பு போட்டித்தேர்வு நடத்தியது. தமிழகம் முழுவதும் சுமார் 16 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். இதில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, ராமேசுவரம் ஆகிய ஊர்களில் உள்ள மையங்களில் தேர்வு எழுதியவர்களில் 39 பேர் தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் வந்தது பெரும் சர்ச்சையானது.

இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணைக்கு பின்பு அடுக்கடுக்காக பெரும் முறைகேடுகள் அம்பலத்துக்கு வரத்தொடங்கின. இதில் பல கோடி ரூபாய் கைமாறியது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக கடந்த சில நாட்களாக அரசு பணியில் இருப்பவர்களும், புரோக்கர்களும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

போலீஸ்காரர் சித்தாண்டி

இந்த தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பிடித்தது, சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை அடுத்த பெரியகண்ணனூரை சேர்ந்த திருவராஜ் ஆவார். ஆடு மேய்த்து வந்தவரான அவர், மாநிலத்திலேயே முதல் இடம் பிடித்ததில் மோசடி அரங்கேறி இருக்கிறதா? என்ற கோணத்தில் நடத்திய விசாரணைக்கு பின்னர்தான், அதே ஊரைச் சேர்ந்த சித்தாண்டி (வயது 45) என்பவர் மீது விசாரணை திரும்பியது.

சித்தாண்டி சென்னையில் சில ஆண்டுகளாக போலீஸ் வேலையில் இருந்து வருபவர். ஆனால், அவருடைய மனைவி சண்முகபிரியா, சித்தாண்டியின் தம்பி வேல்முருகன் உள்பட அவருடைய உறவினர்கள் மற்றும் வேண்டப்பட்டவர்கள் சிலர் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் வெற்றி பெற்று அடுத்தடுத்து அரசு பணியில் சேர்ந்ததும் அம்பலமானது. அவர்களும் குரூப்-4, குரூப்-2ஏ தேர்வுகளில் தரவரிசையில் முன்னணி இடங்களை பிடித்து தேர்வானதுதான் இந்த வழக்கு விசாரணையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. அவர்கள் அனைவரும் சித்தாண்டி மூலமாக டி.என்.பி.எஸ்.சி.யில் சில முக்கிய அதிகாரிகளின் துணையுடன் பல லட்சம் பணத்தை கொடுத்து, டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் விடைத்தாள்களை மாற்றியும், திருத்தம் செய்தும் அதிக மார்க் வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

தலைமறைவு

இந்த விவகாரம் வெளிவரத்தொடங்கியதும் போலீஸ்காரர் சித்தாண்டி தலைமறைவானார். சென்னை எழிலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்த அவருடைய மனைவி சண்முகபிரியாவும் விடுப்பில் சென்று தலைமறைவானார்.

அதே நேரத்தில் காரைக்குடி சார்-பதிவாளராக பணியாற்றி வந்த போலீஸ்காரர் சித்தாண்டியின் தம்பி வேல்முருகன் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சென்னை கொண்டு செல்லப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில்தான் சித்தாண்டி எப்படியும் அவரது சொந்த ஊருக்கு நிச்சயம் வருவார் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் நம்பினர்.

சிவகங்கையில் கைது

இதற்காக சாதாரண உடையில் கண்காணித்தனர். அதன்படி நேற்று சிவகங்கையை அடுத்த அண்ணாமலை நகரில் உள்ள வீட்டுக்கு, தன்னுடைய மாமனார் ஜெயசுந்தரத்தை பார்க்க வந்த சித்தாண்டியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரிடம் சற்று நேரம் விசாரணை நடத்திவிட்டு, சென்னைக்கு கொண்டு சென்றார்கள். கடந்த சில நாட்களாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சிக்காமல் இருந்துவந்த சித்தாண்டி, ஆந்திர மாநிலத்தில்தான் பதுங்கி இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளிவந்தன. ஆனால், அவர் சொந்த ஊருக்கு ஏன் வந்தார்? சி.பி.சி.ஐ.டி. போலீசார் விரித்த விலையில் அவர் தானாக வந்து சிக்கியது எப்படி? என்பது குறித்த பரபரப்பு தகவல்களும் தெரியவந்தன. அதன் விவரம் வருமாறு:-

தனிப்படை

குரூப்-4 முறைகேடு விவகாரத்தில் போலீசார் தன்னை தேடுவதை அறிந்த போலீஸ்காரர் சித்தாண்டி, மருத்துவ விடுப்பு எடுத்து விட்டு தலைமறைவானார். இதே போல் குரூப்-2ஏ தேர்வு முறைகேடு விவகாரம் அம்பலமானதும் அவருடைய மனைவி சண்முகபிரியாவும் தலைமறைவானார். எனவே சித்தாண்டியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

சித்தாண்டியின் சொந்த ஊர், காளையார்கோவில் அருகே உள்ள பெரியகண்ணனூர் என்றாலும் அவர் சிவகங்கையை அடுத்த அண்ணாமலை நகரில் சொந்தமாக வீடு கட்டியுள்ளார். சிவகங்கைக்கு சித்தாண்டி குடும்பத்துடன் வந்தால் அந்த வீட்டில்தான் தங்குவது வழக்கம். இதே போல் அதே அண்ணாமலை நகரில் சித்தாண்டியின் தம்பி வேல்முருகனும் மற்றொரு வீட்டில் வசித்துள்ளார். அதன் அருகே உள்ள இன்னொரு வீட்டில் சித்தாண்டியின் மாமனார் ஜெயசுந்தரம் தனியாக வசிக்கிறார்.

சரண் அடைய முயற்சியா?

குரூப்-4 விவகாரத்துக்கு பிறகு சித்தாண்டி மற்றும் அவருடைய தம்பி வேல்முருகன் ஆகியோரின் வீடுகள் பூட்டிக்கிடந்தன. ஜெயசுந்தரம் மட்டும் அவரது வீட்டில் இருந்து வந்தார். எனவே அந்த 3 வீடுகளையும் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில் சித்தாண்டி சிவகங்கை கோர்ட்டில் நேற்று சரண் அடைய இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எனவே சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் போலீசாரின் கண்காணிப்பு தீவிரமானது. நேற்று பகல் 11 மணி அளவில் அண்ணாமலைநகருக்கு வந்த சித்தாண்டி, தன்னுடைய மாமனார் ஜெயசுந்தரத்தை பார்க்க சென்றார். அப்போது அங்கு நின்றிருந்த போலீசார் சித்தாண்டியை மடக்கி பிடித்து கைது செய்தனர். உடனே அவரை ஜீப்பில் ஏற்றி அழைத்து சென்றுவிட்டனர். மேலும் சித்தாண்டியின் மனைவி சண்முகபிரியாவை பிடிக்கவும் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சித்தாண்டியிடம் நடத்தப்படும் விசாரணையில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகளுக்கு வேறு யாருக்கெல்லாம் தொடர்பு? என்பது குறித்த மேலும் பல முக்கிய தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story