திருவள்ளூர் அருகே குழந்தை தொழிலாளி மீட்பு கடை உரிமையாளர் கைது
திருவள்ளூர் அருகே குழந்தை தொழிலாளி மீட்கப்பட்டார். இது தொடர்பாக கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் பகுதிகளில் உள்ள கடைகளில் சிறுவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட சமூக நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு புகார்கள் வந்தது.
இதைத்தொடர்ந்து சேவை மையத்தின் நிர்வாகி ஞான செல்வி, ஆலோசகர்கள் பிரியங்கா, சிந்து மற்றும் தொழிலாளர் துணை ஆய்வாளர் வெங்கடாஜலபதி, தொழிலாளர் உதவி ஆய்வாளர் ஜான், முத்திரை ஆய்வாளர் அசோக்குமார் ஆகியோர் நேற்று திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
குழந்தை தொழிலாளி மீட்பு
அப்போது அவர்கள் அங்கு உள்ள ஒரு கரும்பு ஜூஸ் கடையில் ஆய்வு மேற்கொண்டபோது, அந்த கடையில் திருவள்ளூரை அடுத்த கூடம்பாக்கம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் குழந்தை தொழிலாளியாக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.
அவரை மீட்டு திருவள்ளூரில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் சிறுவன் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு குடும்ப சூழ்நிலை காரணமாக இந்த கடையில் குழந்தை தொழிலாளியாக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.
சிறுவனை கடையில் வேலைக்கு அமர்த்திய கடையின் உரிமையாளரான கவுரிசங்கர் (வயது 42) கைது செய்யப்பட்டார்.
Related Tags :
Next Story