சப்-இன்ஸ்பெக்டர் மகளுக்கு நர்சு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி ஜிப்மர் ஊழியர் உள்பட 3 பேர் மீது வழக்கு
ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் மகளுக்கு நர்சு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி செய்த ஜிப்மர் ஊழியர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மூலக்குளம்,
புதுவை வைத்திக்குப்பம் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் பாஸ்கரன். புதுவை காவல்துறையில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவரது மகள் வல்லத்தரசி (வயது 30). நர்சிங் படித்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருந்தார்.
ரூ.4 லட்சம்
வேலை தொடர்பாக தனக்கு தெரிந்த முருகசாமி என்பவரிடம் வல்லத்தரசி தெரிவித்துள்ளார். அவர் மூலக்குளம் டாக்டர் ராதா கிருஷ்ணன் நகரை சேர்ந்த ஜிப்மர் ஊழியர் ரவிசேகர் என்பவரை அறிமுகப்படுத்தி உள்ளார்.
அவர் பணம் கொடுத்தால் ஜிப்மரில் நர்சு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து ரூ.4 லட்சத்தை ரவிசேகரிடம் கொடுத்துள்ளனர். அப்போது அவரது மனைவி சாமளாவும் உடனிருந்துள்ளார்.
மோசடி வழக்கு
ஆனால் ரவி சேகர் வாக்குறுதி அளித்தபடி ஜிப்மரில் நர்சு வேலை வாங்கி தரவில்லை. அதேநேரத்தில் அவர்கள் கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் குறித்து வல்லத்தரசி ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ரவிசேகர், சாமளா, முருகசாமி ஆகியோர் மீது மோசடி பிரிவின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story