குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக கூறி நகை வியாபாரியிடம் ரூ.7¾ லட்சத்தை பறித்து சென்ற 6 பேர் கும்பல் கைது


குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக கூறி நகை வியாபாரியிடம் ரூ.7¾ லட்சத்தை பறித்து சென்ற 6 பேர் கும்பல் கைது
x
தினத்தந்தி 4 Feb 2020 11:00 PM GMT (Updated: 4 Feb 2020 7:30 PM GMT)

குறைந்த விலையில் தங்கம் தருவதாக கூறி நகை வியாபாரியிடம் ரூ.7¾ லட்சத்தை பறித்து சென்ற 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

ஓசூர்,

புதுக்கோட்டை மாவட்டம், ராஜகோபாலபுரம் பெரியார் நகரை சேர்ந்தவர் சுரே‌‌ஷ்குமார் (வயது 45). நகை வியாபாரி. இவரிடம் கடந்த 2 மாதத்திற்கு முன் ‘பேஸ்புக்’ மூலமாக சம்பத் என்பவர் பழக்கம் ஆனார். அவர் தன்னிடம் குறைந்த விலைக்கு தங்கம் உள்ளதாகவும், தேவைப்படும் பட்சத்தில், வேலூர் மாவட்டம், ஆம்பூரை சேர்ந்த இப்ராஹிம் என்பவரை தொடர்பு கொள்ளவும் என, மொபைல் எண்ணை கொடுத்தார்.

இதை நம்பிய சுரே‌‌ஷ்குமார், அந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம், பேரிகைக்கு பணத்துடன் வருமாறு அந்த நபர் சுரே‌‌ஷ்குமாரிடம் கூறினார். இதனால் கடந்த மாதம், 4-ந் தேதி தனக்கு சொந்தமான காரில், டிரைவர் சிவராமகிரு‌‌ஷ்ணன் என்பவருடன் சுரே‌‌ஷ்குமார் அங்கு சென்றார். பின்னர் சுரே‌‌ஷ்குமாருடன் இருவர் காரில் ஏறி கொண்டு, பணம் இருக்கிறதா? என்பதை உறுதி செய்த பிறகு கர்நாடக மாநிலத்திற்கு அழைத்து சென்றனர்.

பணம் பறிப்பு

கெசரகிரி சோதனைச்சாவடி அருகே சென்றபோது, காரில் போலீஸ் உடையில் வந்த கும்பல், சுரே‌‌ஷ்குமார் சென்ற காரை வழிமறித்து, தங்கம் வாங்க கொண்டு வந்த, ரூ.7 லட்சத்து 80 ஆயிரம் மற்றும் செல்போன், அவரது டிரைவர் அணிந்திருந்த, 32 கிராம் தங்க நகையை பறித்து கொண்டு, சுரே‌‌ஷ்குமாருடன் காரில் வந்த இருவரை விசாரணைக்கு அழைத்து செல்வதாக கூறி, காரில் ஏற்றி சென்றனர். சிறிது நேரத்திற்கு பிறகு தான், போலீஸ் உடையில் வந்தவர்களும், தங்கம் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்றவர்களும், ஒரே கும்பல் என்பது சுரே‌‌ஷ்குமாருக்கு தெரியவந்தது. இது குறித்து சுரே‌‌ஷ்குமார் பேரிகை போலீசில் கடந்த மாதம், 8-ந் தேதி புகார் செய்தார்.

இந்த நிலையில், டி.என்.தொட்டி - பேரிகை சாலையில் உள்ள பி.எஸ்., திம்மசந்திரம் பகுதியில், நேற்று முன்தினம் பேரிகை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த, 6 பேர் கும்பலிடம் விசாரித்தபோது, அவர்கள் ராணிபேட்டை நவல்பூர் பகுதியை சேர்ந்த பாபு (48), மதுரை லூர்து நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (46), ஆரணி அடுத்த குளத்துமேட்டு பகுதியை சேர்ந்த மன்சூர் (41), கிரு‌‌ஷ்ணகிரியை அடுத்த நடுப்பட்டி பகுதியை சேர்ந்த கண்ணன் (30), வேலூர் பெரியாம்குப்பத்தை சேர்ந்த பிரகா‌‌ஷ் (35) ஒடிசாவை சேர்ந்த மதன்செட்டி (32) என்பதும், சுரே‌‌ஷ்குமாரை ஏமாற்றி பணம் பறித்தது அந்த கும்பல்தான் என்பதும் தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.

வலைவீச்சு

மேலும் அவர்களிடம் இருந்து கார் மற்றும் ரூ.7 லட்சத்து 80 ஆயிரம், தங்க நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். போலீசாரின் விசாரணையில் குறைந்த விலைக்கு தங்க நகை தருவதாக கூறி இவர்கள் பலரை வரவழைத்து பின்னர் போலீஸ் போல நடித்து பணத்தை பறித்து சென்றது தெரியவந்தது.

இந்த கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட இப்ராஹிம் மற்றும் போலீஸ், வருமான வரித்துறை அதிகாரி வேடத்தில் வந்து பணம் பறித்து செல்லும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த டேனியல் ஆகியோரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதில் டேனியல் பெங்களூருவில் டான் செக்யூரிட்டி என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story